tamilnadu

img

கிசான் திட்ட முறைகேட்டில் சட்டரீதியாக நடவடிக்கை.... தமிழக முதலமைச்சர் பேட்டி

திருவண்ணாமலை:
கிசான் திட்ட முறைகேட்டில் ஈடுபட்ட வர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். திருவண்ணாமலை அரசு கலைக் கல்லூரியில் முழு எண்ணிக்கையில் மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

திருவண்ணாமலை மாவட்டத்தில்  வளர்ச்சி திட்டப்பணிகள் மற்றும்  கொரோனா நோய் தொற்று பரவுதலை கட்டுப்படுத்துவது குறித்து  தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி புதன்கிழமையன்று ஆய்வு மேற்கொண்டார்.மாவட்டத்தில் ரூ.52.59 கோடியில் 31 முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார். பின்னர் 16 துறைகள் சார்பில் 18,279 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை  வழங்கினார்.இதன்பின்னர் திருவண்ணா மலை மாவட்ட ஆட்சியர் அலுவலகவளாகத்தில் முதலமைச்சர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:

திருவண்ணாமலையில் நோய் பரவலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது. மாநில அரசு சார்பில் கொரோனா தடுப்புப் பணிகளுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்பட்டு வருகிறது. முதலமைச்சர் சிறப்பு குறைதீர் திட்டம் மூலமாக மக்களிடம் இருந்து பெற்றப்பட்ட மனுக்களில் 35 ஆயிரம் மனுக்களுக்குதீர்வு காணப்பட்டுள்ளது. திருவண்ணா மலையில் புதிய பேருந்து நிலையம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.செண்பகத்தோப்பு அணை கதவுகளை சீரமைக்கும் பணி ரூ. 16.3 கோடியில் நடைபெற்று வருகிறது. இந்த மாத இறுதியில் அந்த பணி நிறைவுபெறும். ஆரணி, திருவண்ணாமலை நகரங்களில் புறவழிச் சாலைகளுக்கு நிலமெடுப்பு பணி நடைபெற்று வருகிறது. கல்வராயன் மலை, அக்கரைப்பட்டியில் அமைக்கப்பட்டு வரும்  மலைவழிச்சாலை இன்னும் இரண்டு மாதங்களில் நிறைவுபெறும். ஜமுனா மரத்தூர் மலை கிராம மக்களின்வாழ்வாதாரம் மேம்பட ரூ. 2.6 கோடி மதிப்பில் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது. நதிநீர் பிரச்சனையில் தமிழகத்தின் உரிமையை விட்டுக்கொடுக்கமாட்டோம். கிசான் திட்ட முறைகேட்டை கண்டுபிடித்து நடவடிக்கை எடுத்ததே தமிழக அரசுதான். கிசான் திட்ட முறைகேடு தொடர்பாக சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கிசான் திட்ட முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.திருவண்ணாமலை அரசு கலைக்கல்லூரியில் கடந்த காலங்களைகாட்டிலும், இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளதாக செய்தியாளர்கள் கேள்வியெழுப்பியபோது, மாணவர் சேர்க்கை எண்ணிக்கை குறைக்கப் படவில்லை. அதிகப்படுத்துவதற்கான முயற்சிகள்  மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று தெரிவித்தார்.