விவசாயிகளின் வருவாயை அதிகரிக்கும் மசோதாக்கள் என மூன்று மசோதாக்களை மத்தியஅரசாங்கம்திங்களன்று நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்திருக்கிறது. விவசாயிகளின் விளைபொருட்களுக்கு கட்டுப்படியான விலை கிடைப்பதற்கான உத்தரவாதத்தை ஏற்படுத்தாமல் அரசேகொள்முதல் செய்யாமல் இன்னும் எத்தனைமசோதாக்கள் கொண்டு வந்தாலும் அவர்களின்வருவாய் அதிகரிக்கப் போவதில்லை.
பிரதமர் நரேந்திர மோடி முதல்முறை நாடாளுமன்ற தேர்தல் வாக்குறுதியாக கூறிய விவசாயிகளின் விளை பொருட்களுக்கு உற்பத்தி செலவைவிட ஒன்றரை மடங்கு விலை நிர்ணயம் செய்யப்படும் என்பது அவரது முதல் பதவிக்காலம் முடிந்தபின்னும் கூட நிறைவேற்றப்படாத வாக்குறுதியாகவே போனது. அடுத்தமுறை பிரதமராக பதவியேற்ற பின்னரும் கூட அதுபற்றி கவலையேதும் கொள்ளவில்லை என்பது அவரது அரசின் அடுத்தடுத்தநடவடிக்கைகளிலிருந்தே தெரிகிறது.
அவரதுஅரசின் புதிய புதிய பெயரிலான அவசரச் சட்டங்களும் மசோதாக்களும் பெயரளவில் விவசாயிகளின் நலனுக்கானதாகச் சொல்லப்படுகிறதே தவிர உண்மையில் கார்ப்பரேட் விவசாயிகளின் நலனுக்கானதாகவே அமைந்துள்ளது.டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதன் ஆணையத்தின் பரிந்துரைகளை அமல்படுத்துவதற்கு மோடியின் அரசு முயற்சியேதும் செய்யவே இல்லை. அதுமட்டுமின்றி விளை பொருளுக்குஒன்றரை மடங்கு விலை தருவது சாத்தியமானது அல்ல என்று உச்சநீதிமன்றத்திலேயே கூறிவிட்டது. ஆயினும் இன்னும் நம்மை மக்கள்நம்புவார்கள் என்று நினைத்துக் கொண்டுதான் மோடி அரசு ஒவ்வொரு நாடாளுமன்ற கூட்டத்தொடரிலும் புதிய பெயரில் சட்டங்களை கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதிதான்திங்களன்று வேளாண் துறை அமைச்சர் நரேந்திரசிங் தோமரால் மூன்று மசோதாக்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.நாட்டின் 86 சதவீத விவசாயிகள் 2 ஹெக்டேருக்கும் குறைவான நிலத்தையே வைத்திருப்பதால் அவர்களால் குறைந்தபட்ச ஆதரவு விலை பலனை அனுபவிக்க முடியாத நிலை ஏற்படுகிறது. இதுபோன்றவர்களுக்கு வரவுள்ள இந்தசட்டங்கள் மிகுந்த பயனுள்ளதாக இருக்கும்என்று அமைச்சர் தோமர் கூறியிருக்கிறார்.
சிறிய மிக சிறிய விவசாயிகள் தங்களின் விளைபொருட்களுக்கு கட்டுப்படியான விலையைபெறமுடியவில்லை என்பதற்கு அமைச்சரே சாட்சி. ஆனால் சுவாமிநாதன் ஆணையத்தின்பரிந்துரைகளை அமல்படுத்துவதில் அக்கறை ஏதும் இல்லாமல் அதை நோக்கிய செயல்பாடுஏதுமின்றி எத்தனை எத்தனை புதிய சட்டங்களை புதிய பெயர்களில் கொண்டு வந்தாலும்அதனால் சாதாரண விவசாயிகளுக்கு பயன்ஏதும் ஏற்படப் போவதில்லை. கார்ப்பரேட் நிறுவனங்களின் விவசாய பண்ணைகளுக்கே பயன்படும். ஆனாலும் சாதாரண ஏழை விவசாயிகளைஏமாற்றுவதற்கான நடவடிக்கைகளில் புதிது புதிதாக ஈடுபடுவதால் அவர்கள் இந்த அரசை நம்பப்போவதில்லை.