புதுதில்லி:
குடிதண்ணீருக்காக நாளும் போராடமுடியாது என்பதால், எனது 3 மகள்களுடன் தற்கொலை செய்து கொள்ள அனுமதியுங்கள் என்று விவசாயி ஒருவர் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
நாடு முழுவதும் தண்ணீர் பஞ்சம் நிலவிவருகிறது. வறட்சியின் காரணமாக குடிக்கக்கூட தண்ணீர் இன்றி மக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர்.
இந்நிலையில்தான், உத்தரப்பிரதேச மாநிலம், ஹத்ராஸ் மாவட்டம், ஹாசாயான் பகுதியைச் சேர்ந்த விவசாயி சந்திரபால் சிங் என்பவர் பிரதமர் மோடிக்கு கடிதம்ஒன்றை எழுதியுள்ளார்.
தான் வசிக்கும் பகுதியில் குடிக்கும் நீர்உவர்ப்பாக இருக்கும் நிலையில், இப்பிரச்சனைக்குத் தீர்வு காண, அப்பகுதியை சேர்ந்தஅரசு அதிகாரிகளை சந்திரபால் சிங் அணுகியுள்ளார். ஆனால், அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப் படுகிறது. ஏற்கெனவே, விவசாயத்திற்குத் தேவையான தண்ணீர் கிடைக்காத நிலையில், தற்போது குடிநீருக்கும், அல்லாட வேண்டியிருப்பதால், மனம் நொந்து விரக்தி நிலைக்கு ஆளான சந்திரபால் சிங், தனது மூன்று மகள்களுடன் தற்கொலை செய்து கொள்ளும் முடிவுக்கு வந்துள்ளார்.
அதைத்தொடர்ந்தே தற்கொலை செய்துகொள்ள அனுமதி கேட்டு பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். விவசாயி ஒருவர் குடிநீர் கிடைக்காததன் காரணமாக, தற்கொலை முடிவெடுத்து,
அதற்காக பிரதமர் மோடியிடம் அனுமதி கேட்டிருப்பது, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.இதனிடையே, தற்கொலை செய்து கொள்ளும் முடிவை எடுக்கும் அளவிற்கு, ஹாசாயான் பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு இருக்கிறதா? என்று விசாரித்தபோது, சந்திரபால் சிங் கருத்தையே, அங்குள்ள பொதுமக்களும் எதிரொலித்துள்ளனர்.“எங்கள் பகுதியில் உள்ள போர்வெல் லில் இருந்து எடுக்கும் நீரைக் குடிக்க முடியவில்லை. உவர்ப்பாக உள்ள காரணத்தால்கால்நடைகளும் இந்த நீரை அருந்தமறுக்கின்றன. பயிர்களும் கருகிப்போகின்றன. இந்த பிரச்சனை தொடர்பாக அதிகாரிகளிடம் எத்தனையோ தடவை முறையிட்டும் தீர்வுதான் கிடைக்கவே இல்லை” என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.
“ஒரு குடம் நீருக்காக நாங்கள் பல கிலோமீட்டர் தொலைவு நடக்கிறோம்” என்றும் அவர்கள் கவலையைப் பகிர்ந்துள்ளனர்.மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் மாவட்டத்தில் உள்ள நிப்தட் தெஹ்ஸில் பகுதியைச் சேர்ந்த சஞ்சய் சாதே என்ற விவசாயி, ஆயிரத்து 64 ரூபாயை பிரதமர் நரேந்திர மோடிக்கு மணியார்டர் அனுப்பியது கடந்தசில மாதங்களுக்கு முன்பு பரபரப்பை ஏற்படுத்தியது. தனது நிலத்தில் விளைந்த 750 கிலோவெங்காயத்தை சஞ்சய் சாதே விற்பனைக்கு கொண்டு சென்றபோது, அதற்குப் போதிய விலை கிடைக்கவில்லை. ஒரு கிலோ வெங்காயம் ஒரு ரூபாய்க்கு விலை கேட்கப்பட்டுள்ளது. இறுதியாக ரூ. 1 ரூபாய் 40 காசுகள் என்ற விலைக்கு வெங்காயத்தை விற்று, வெறும் 1064 ரூபாயோடு வீடு திரும்பினார்.
விவசாய விளைபொருட்களுக்கு, உற்பத்திச் செலவைக் காட்டிலும் ஒன்றரை மடங்கு கூடுதல் விலை வழங்குவோம் என்று பிரதமர் மோடி ஏற்கெனவே வாக்குறுதி அளித்திருந்த நிலையில், இந்த 1064 ரூபாய்தான் ஒன்றரை மடங்கு கூடுதல்விலையா? என்று கேட்டு, அந்தப் பணத்தைமோடிக்கே அனுப்பி வைத்து, தனது குமுறலை வெளிப்படுத்தி இருந்தார்.இந்நிலையிலேயே, குடிநீர் பிரச்சனை தொடர்பாக விவசாயி சந்திரபால் சிங்கும், மோடிக்கு கடிதம் எழுதி, தற்கொலை செய்து கொள்வதற்கு அனுமதி கேட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.