புதுதில்லி:
பாஜக தேசிய நிர்வாகிகள் பட்டியலை அக்கட்சியின் தேசியதலைவர் ஜே.பி.நட்டா சனிக்கிழமையன்று வெளியிட்டுள்ளார். இந்தப் பட்டியலில் தமிழகத்தைசேர்ந்த யாரும் இடம்பெறவில்லை. பாஜகவின் தேசிய செயலாளர் பதவியில் இருந்து எச்.ராஜாகழற்றிவிடப்பட்டார்.
பாஜக அரசின் மக்கள் விரோத திட்டங்களுக்கு தமிழகத்தில் எதிர்ப்பு எழுந்துகொண்டுவருகிறது. தமிழகத்தில் பாஜகவை ‘வளர்ப்பதற்காக’ சமூக வலைத்தளத்தில் கூலிப்படையை அமர்த்தி களமிறக்கிவிட்டும் வெளிமாநிலத்தில் இருந்து இறக்குமதி செய்தும், பல பேரை வேலைக்கு அமர்த்தியும் எதுவும் பலன்கொடுக்கவில்லை. இதனால் பாஜகவின் தேசிய தலைமை தமிழக நிர்வாகிகள் மீது அதிருப்தியிலும் கோபத்திலும் உள்ளது தற்போது வெளியாகியுள்ள நிர்வாகிகள் பட்டியல் மூலம் தெரியவருகிறது. தற்போது வெளியாகியுள்ள பட்டியலில் தில்லியை சேர்ந்த பி.எல். சந்தோஷ் பாஜகவின் தேசிய பொது செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். உத்தரபிரதேசத்தை சேர்ந்த ராஜேஷ் அகர்வால், பொருளாளராக நியமிக்கப்பட்டுள்ளார். கட்சியின் சமூக வலைதள பொறுப்பாளராக உத்தரபிரதேசத்தை சேர்ந்த அமித் மால்வியா நியமனம் செய்யப்பட்டுள்ளார். முன்னதாக இளைஞரணி தலைவராக இருந்த பூணம் மகாஜன் நீக்கப்பட்டுள்ளார். முன்னாள்முதல்வர்கள் ராமன் சிங், வசுந்தரா ராஜே சிந்தியா, முன்னாள் மத்திய அமைச்சர் ராதா மோகன் சிங் உள்ளிட்டோர்துணைத் தலைவர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.