கொச்சி:
தங்க கடத்தல் வழக்கை தீவிரமாக எடுத்துக் கொண்ட கேரள அரசு விரிவான விசாரணை நடத்த எடுத்துக்கொண்ட முயற்சிகளுக்கு என்ஐஏ பாராட்டு தெரிவித்துள்ளது. என்ஐஏநீதிமன்றத்தில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் பி.விஜயகுமார் கேரள அரசையும் முதல்வரையும் பாராட்டினார்.
கொச்சியில் உள்ள என்ஐஏ சிறப்பு நீதிமன்றத்தில் செவ்வாயன்று வழக்கின் இரண்டாவது குற்றவாளியான சொப்னா சுரேஷின் ஜாமீன் மனு விசாரணைக்கு வந்தது. அப்போது, தூதரக பார்சல் மூலம் தங்கம் கடத்தியது குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட வேண்டும் என பிரதமருக்கு கேரள முதல்வர் எழுதிய கடிதத்தை நீதிமன்றத்தில் வழக்கறிஞர் படித்துக் காட்டினார்.
தீவிரவாத தொடர்புள்ளது
தங்க கடத்தலில் தீவிரவாத கும்பலுடன் உள்ள தொடர்பை தெளிவுபடுத்தும் விவரங்கள் விசாரணைக் குறிப்பில் (டைரி)உள்ளதாக நீதிமன்றத்தில் என்ஐஏ தெரிவித்தது. தீவிரவாததொடர்புக்கான சான்றுகளை முந்தைய நாள் விசாரணையின் போது நீதிமன்றம் கோரியிருந்தது.சுமார் 2 கோடி மதிப்பிலான தங்கமும் பணமும் பொருளாதார பரிமாற்றங்கள் குறித்த சான்றுகள் குற்றவாளிகளிட மிருந்து பிடிபட்டது. சொப்னாவின் வங்கி லாக்கர்களிலிருந்து ஒரு கோடி ரூபாயும், ஒரு கிலோ தங்கமும் கைப்பற்றப்பட்டன. அதுதவிர இரண்டு கூட்டுறவு வங்கிகளில் ரூ.35 லட்சம் நிரந்தர வைப்பு நிதியும், பெடரல் வங்கியில் ரூ.25.5 லட்சமும் 8034 யுஎஸ் டாலரும் 711 ஓமன் ரியாலும் கண்டுபிடிக்கப்பட்டன. இவை அனைத்தும் தங்க கடத்தல் மூலம் சொப்னா சம்பாதித்தவை என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜாமீன் மனு மீது மீண்டும் வியாழனன்று விசாரணை நடைபெறும்.
கேரள அரசுக்கு பாராட்டு
சொப்னாவை வழக்கில் சிக்க வைத்தது அரசியல் நோக்கத்துக்காக என சொப்னாவின் வழக்கறிஞர் வாதிட்டார். அப்போது பதிலளித்த கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல், இந்த வழக்கில் அரசியல் தலையீடு இல்லை; மாநில அரசு தான் விரிவான விசாரணை தேவை என கேட்டுக் கொண்டது; அதைத்தொடர்ந்து தேசிய விசாரணை முகமையும், அமலாக்கத்துறை இயக்குநரகமும், சுங்கத்துறையும் விசாரணையை தொடங்கின. அரசின் உயர் அதிகாரிக்கு (சிவசங்கரன்) எதிரான புகார் எழுந்த போது அவர் பதவியில் இருந்துநீக்கப்பட்டார். இதிலிருந்து மாநில அரசுக்கு இப்பிரச்சனையின் மீதான அணுகுமுறை தெளிவானதாகவும் அரசியல் தலையீடுஇருந்திருந்தால் சுட்டிக்காட்டப்பட்டிருக்கும் எனவும் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.