புதுதில்லி:
திருவனந்தபுரம் ஸ்ரீ பத்மநாப சுவாமி கோயிலில் முன்னாள் அரச குடும்பத்திற்கும் அதிகாரம் உள்ளதாக அவர்களது மேல்முறையீட்டை விசாரித்த உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.கோயில் நிர்வாகத்தை கவனிக்க மாவட்ட நீதிபதி தலைமையிலான தற்காலிக ஆட்சிமன்றக் குழுவுக்கும் அனுமதி அளித்து நீதிபதி யூயூ லலித் தலைமையிலான உச்சநீதிமன்ற அமர்வு தீர்ப்பளித்துள்ளது.
புதிய ஆட்சிமன்ற குழு வரும்வரை தற்காலிக குழு பொறுப்பில் நீடிக்கலாம். ஒரு அரசனின் மரணத்தோடு அரச குடும்பத்திற்கான அதிகாரம் இல்லாமல் ஆகிவிடாது எனவும் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ‘பி’ பாதாள அறை திறப்பதில் ஆட்சி மன்றக்குழு முடிவெடுக்கலாம் என தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆட்சி மன்றக்குழுவில் இந்து அல்லாதவரை இணைக்க கூடாது எனவும் கூறப்பட்டுள்ளது.1991இல் கடைசி அரசரின் மரணத்தை தொடர்ந்து அரச குடும்பத்திற்கு கோயில் மீதான உரிமை முடிவுக்கு வந்ததாக கேரள உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. இந்த தீர்ப்புக்கு எதிராகவும் கோயிலின் பாதாள அறைகளில் உள்ள சொத்து வெளியே செல்ல வாய்ப்பு உள்ளதால் பாதாள அறைகளை திறக்கக் கூடாது எனக்கோரியும் முன்னாள் அரச குடும்பம் தாக்கல் செய்த வழக்கில் உச்சநீதிமன்றம் இந்த தீர்ப்பளித்துள்ளது.\
கோயிலின் அபூர்வ பொருட்கள் அடங்கிய ஆறு பாதாள அறைகளை திறக்கக் கூடாது என கோட்டைக்ககம் பகுதியைச் சேர்ந்த பத்மநாபன் முதலில் வழக்கு தொடர்ந்தார். வழக்கு உயர்நீதிமன்றம் சென்றபோது பாதாள அறைகளில் உள்ள அபூர்வ பொருட்களை சரிபார்க்க வேண்டும் எனவும், முன்னாள் அரச குடும்பத்தை உள்ளடக்கிய அறக்கட்டளை அமைக்க வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதற்கு எதிராகவே முன்னாள் அரச குடும்பம் உச்சநீதிமன்றத்தை அணுகியது.
உச்சநீதிமன்றம், பாதாள அறையில் உள்ள அபூர்வ பொருட்களை சரிபார்க்க வல்லுநர் குழுவை நியமித்தது. கோயில் விவகாரங்களை நிர்வகிக்க உச்சநீதிமன்ற வழக்கறிஞர் கோபால் சுப்ரமணியத்தை நியமித்தது. பொருளாதார விவகாரங்களை கவனிக்க முன்னாள் சிஏஜி வினோத் ராய் பொறுப்பாக்கப்பட்டார். இவர்கள் அளித்த அறிக்கை அடிப்படையில் மாவட்ட நீதிபதி தலைமையிலான ஐந்து உறுப்பினர் ஆட்சிமன்ற குழுவும் நியமிக்கப்பட்டது.
‘பி’ பாதாள அறையை ஆட்சிமன்றக்குழு திறந்து சரிபார்க்க உச்சநீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்திருந்தது. இதற்கு அரச குடும்பம் எதிர்ப்பு தெரிவித்ததால் வல்லுநர் குழு பரிசீலிக்குமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. ‘ஏ’ பாதாள அறையான பண்டார வகையும் மற்ற நான்கு பாதாள அறைகளும் வல்லுநர்குழு திறந்து சரிபார்த்தது. ஆனாலும் ‘பி’ பாதாள அறை திறக்கப்படவில்லை. அதோடு ‘ஏ’ பாதாள அறையில் உள்ள அரிய பொருட்களை என்ன செய்ய வேண்டும் எனவும் நீதிமன்றம் தெரிவிக்கும். கோயிலுக்கு தேவையான பொருட்கள் தவிர ஏ மற்றும் பி பாதாள அறைகளில் உள்ள பொருட்களைக் கொண்டு அருங்காட்சியகம் அமைத்து காட்சிப்படுத்த வேண்டும் என கேரள அரசு தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது. இதற்கு அரச குடும்பம் ஆதரவு தெரிவித்துள்ளது.
தீர்ப்புக்கு வரவேற்பு
உச்சநீதிமன்ற உத்தரவை வரவேற்பதாக கேரள தேவசம் அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் தெரிவித்தார். சட்டத்தின் ஆட்சி நடக்கும் ஒரு நாட்டில் உச்சநீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவை அமல்படுத்தும் பொறுப்பு அரசுக்கு உள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.