புதுதில்லி:
கொரோனா பொதுமுடக்கத்தின் போது, கட்டுமானத் தொழிலாளர் நல வாரியம் மூலமாக சுமார் 3 கோடியே 50 லட்சம் தொழிலாளர்களுக்கு ரூ. 4 ஆயிரத்து 315 கோடி நிவாரணம் வழங்கப்பட்டு உள்ளதாக மத்திய அரசு கணக்கு காட்டியுள்ளது.
கட்டுமானத் தொழில் கூடுதல்வரி மூலம் கட்டுமானத் தொழிலாளர் களுக்கான நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.கட்டுமான கூடுதல் வரி என்பது, கட்டுமான செலவுகளுக்கான வரியின் மீது விதிக்கப்படும் கூடுதல் வரி யாகும். ரூ. 10 லட்சம் ரூபாய்க்கு அதிகமான கட்டுமானப் பணிகளுக்கு 1 சதவிகிதம் கூடுதல் வரி நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. சில மாநிலங்களில் இது 2 சதவிகிதமாக உள்ளது. இந்த தொகையை மாநில அரசுகள் வசூல்செய்து ஒரு நிதியாக வைத்திருக்கின றன. இதன்படி, சுமார் ரூ. 31 ஆயிரம் கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டு, இருப்பாக உள்ளன.
கொரோனா வேலை முடக்கத்தை யொட்டி, இந்த 31 ஆயிரம் கோடியில் இருந்துதான், மாநில அரசுகள் ஜூன் 2-ஆம் தேதி வரை, 3 கோடியே 50 லட்சம் தொழிலாளர்களுக்கு ரூ. 4 ஆயிரத்து 313 கோடி ரூபாயை அவர்களின் வங்கிக் கணக்குகள் மூலம் நேரடியாக வழங்கியுள்ளன. சுமார் 14 சதவிகித நிதியை எடுத்து செலவிட்டுள்ளன. மத்திய - மாநில அரசுகள் புதிதாக எந்தவொரு நிதி ஒதுக்கீட்டையும் தனது கையிலிருந்து செய்யவில்லை.அதிகபட்சமாக தில்லியில் ஒருவருக்கு ரூ. 5 ஆயிரம் வழங்கப் பட்டுள்ளது. அடுத்ததாக கேரளா மற்றும் பஞ்சாப்பில் தலா ரூ. 3 ஆயிரமும். இமாசலப் பிரதேசம், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் ரூ. 2 ஆயிரம், ஒடிசாவில் ரூ. 1500 என்று நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. இவை தவிர, 21 மாநிலங்கள் தலா ரூ. 1000 வழங்கியுள்ளன.உத்தரப்பிரதேசம் மற்றும் பீகார்உள்ளிட்ட மாநிலங்களில் கடந்த மூன்று மாதங்களாகக் கட்டுமானதொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் இலவச உணவுப் பொருட்களும்கட்டுமான தொழில் கூடுதல் வரி யிலிருந்தே செலவிடப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.