tamilnadu

img

நெருக்கடியில் தொழில் நிறுவனங்கள் : நிதியமைச்சர் தனிக்கவனம் செலுத்த வலியுறுத்துவேன்.... மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் உறுதி

மதுரை:
கொரேனாவால் நெருக்கடியில் தொழில் நிறுவனங்கள் சிக்கியுள்ளன. இப்பிரச்சனையை மக்களவையில் எழுப்புவேன். நிதியமைச்சர் தனிக்கவனம் செலுத்த வலியுறுத்துவேன் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் உறுதியளித்துள்ளார்.

சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு மத்திய அரசால் கொரோனா கால அவசர கடன் வசதித் திட்டம்  அறிவிக்கப்பட்டது.   இந்தத் திட்டத்தின்  செயல்பாடு, எதிர்கால தேவைகள் குறித்து தொழில் முனைவோர் விவாதித்தனர்.
ஹரி தியாகராஜன் (இந்திய இண்டஸ்ட்ரீயல் தொழிற்கூட்டமைப்பு), ஜெகதீசன் (சேம்பர் ஆப் காமர்ஸ்), முருகானந்தம் (மடீசியா), சதீஷ், வெங்கடேசன் (சௌராஷ்டிரா தொழில் முனைவோர் சங்கம்), பாலசுப்பிரமணியன் (உணவுப் பொருள் உற்பத்தியாளர் சங்கம்), அறிவழகன் (லீட் பேங்க்), இராமலிங்கம் (மாவட்ட தொழில் மையம்) உட்பட ஏராளமான வர்த்தகர்கள் கலந்து கொண்டு  தங்களுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி, தேவையான தளர்வுகள் குறித்து கருத்து தெரிவித்தனர்.
குறிப்பாக  தொழில் நிறுவனங்களுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி, அதிலிருந்து மீள்வதற்கான உத்தி, அதை பூர்த்தி செய்வதற்கான சாத்தியக் கூறுகள் குறித்து பேசப்பட்டது. எளிமையான வழிமுறைகள் மூலம் கடன் வழங்க வேண்டும். ஜாமீன் கேட்பதில் தளர்வு வேண்டும், வட்டியை தள்ளுபடி செய்ய வேண்டுமென வலியுறுத்தினர்.கூட்டத்தில் பங்கேற்ற வங்கி அதிகாரிகள், மாவட்ட தொழில் மைய அதிகாரிகள் தொழில் முனைவோரின் ஆலோசனைகளை கேட்டறிந்ததோடு அதை செயல்படுத்துவதாகக்  கூறினர்.

இதில் கலந்து கொண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் பேசியதாவது:-

மதுரை மாவட்டத்திற்குட்பட்ட பகுதியில் சிறப்புக் கடன் வசதி திட்டத்தின் மதிப்பீடு ரூ.606.04 கோடி. மாவட்டத்திற்கு உட்பட்ட  32 வங்கிகள், அதனுடைய கிளைகள்  மூலம் தேசிய வங்கிகள் ரூ.122.77 கோடி, தனியார் வங்கிகள் ரூ.156.68 கோடி என மொத்தம் ரூ.281.37 கோடி கடன்  வழங்கியுள்ளது. இந்தத் தொகை முழுமையாக தொழில் முனைவோரை சென்றடைவதற்காக தனிக்கவனமும், சிறப்பு முயற்சியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கொரோனா (நெருக்கடியான) காலத்தில் தொழில் நிறுவனங்கள் சந்தித்து வரும் சிரமங்கள், வர்த்தகர்களுக்கு அரசு செய்யவேண்டிய சலுவைகள் குறித்து மக்களவையில் பேசுவேன்.  விவாதத்திற்கு உட்படுத்துவேன். நடைபெறவுள்ள கூட்டத்தொடரில் நிதியமைச்சரைச் சந்தித்து கோரிக்கைகள் மீது தனிக்கவனம் செலுத்த வலியுறுத்துவேன் என்றார்.