tamilnadu

img

அமைதி வழியில் போராடியது கிரிமினல் குற்றமாம்.. சீத்தாராம் யெச்சூரி மீது வழக்குப்பதிவு

புதுதில்லி:
இந்திய அரசமைப்புச்சட்டத்தைப் பாதுகாப்பதற்காக அமைதி வழியில் கிளர்ச்சிப் போராட்டங்களில் ஈடுபட்டதை கிரிமினல் குற்றம் எனக்கூறி, வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு எதிராகக் கடுமையான முறையில் கண்டனம் முழங்குக என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறைகூவல் விடுத்துள்ளது.

இதுதொடர்பாக கட்சியின் அரசியல் தலைமைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் கீழ் உள்ள தில்லிக் காவல்துறையானது, வடகிழக்கு தில்லியில் பிப்ரவரியில் மிகவும் கொடூரமான முறையில் நடைபெற்ற மதவெறி வன்முறை வெறியாட்டங்களுடன் பிரபலமான அரசியல் தலைவர்கள், கல்வியாளர்கள், கலைஞர்கள் மற்றும் சமூகசெயற்பாட்டாளர்களை, சம்பந்தப் படுத்திட முயற்சித்திருக்கும் வெட்கக் கேடான நடவடிக்கைகண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல்தலைமைக்குழு அதிர்ச்சி அடைந்திருக் கிறது.  மிகவும் முரட்டுத்தனமாகவும் பாரபட்சத்துடனும் வஞ்சனையுடனும், மேற்கொண்டுள்ளப்பட்டுள்ள இந்நடவடிக்கையைக் கண்டிப்பதற்குப் போதுமான வார்த்தைகள் இல்லை.

தில்லியில் ஆர்எஸ்எஸ்/பாஜக-வினரால் நன்கு திட்டமிட்டு மதவெறி வன்முறை வெறியாட்டங்கள் நடத்தப்பட்டன. ஆனால் தற்போது குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராகப் போராடிய கிளர்ச்சியாளர்களின் “ஆழமாக வேரூன்றிய சதி”யின் விளைவாகவே தில்லி வன்முறை வெறியாட்டம் நடந்தது என்று சித்தரித்திட முயற்சிப்பது தெள்ளத்தெளிவாகிறது. இதன் சமீபத்திய தொடர்ச்சியாக தில்லிக் காவல்துறை யானது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, புகழ்பெற்ற பொருளாதார அறிஞர் பேரா. ஜெயதி கோஷ், தில்லிப் பல்கலைக் கழகப் பேராசிரியர் அபூர்வானந்த், ஸ்வராஜ் அபியான் தலைவர் யோகேந்திர யாதவ், ஆவணப்பட தயாரிப்பாளர் ராகுல் ராய் உட்பட முக்கியமான பிரமுகர்கள் பலரை  இவர்கள்தான் தங்கள் ‘திட்டத்தின்’ ஓர் அங்கமாக இந்தக் கிளர்ச்சிகளை ஊக்குவித்ததாக குற்றம்சாட்டியுள்ளது.

குடியுரிமைத்திருத்தச் சட்டம் மற்றும் தேசியக் குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிராக நடைபெற்ற போராட்டங்களில் ஈடுபட்டவர்களைத் தூண்டிவிட்டவர்கள் என்று பலர் மீது பதிவுசெய்யப்பட்டிருந்த முதல் தகவல் அறிக்கை எண் 50/20 உடன் தாக்கல் செய்துள்ள துணை குற்ற அறிக்கையில் (supplemen-tary charge sheet) சீத்தாராம் யெச்சூரி உள்ளிட்ட தலைவர்களின் பெயர்களை தில்லி காவல்துறை சேர்த்துள்ளது. மத்தியக் குற்றப்புலனாய்வுக் கழகம்(சிபிஐ), தேசியப் புலனாய்வு முகமை, அமலாக்கத்துறை போன்ற அமைப்புகள் ஆட்சியாளர்களுக்கு எதிராக இருப்பவர்கள் மீது பாய்ந்து, அவர்களை மூர்க்கத்தனமானமுறையில் அடக்கிட நடவடிக்கைகள் எடுப்பதுபோலவே, இப்போது காவல்துறைமிகவும் அப்பட்டமாக துஷ்பிரயோக முறையில் நடவடிக்கையில் இறங்கி யிருக்கிறது.அரசமைப்புச் சட்டத்திற்கு எதிராகசெயல்படும் அரசாங்கத்தின் நட வடிக்கைகளைக் கடுமையாக எதிர்த்திடும்இவர்களைத் துன்புறுத்தி, சிறையில் அடைப்பதற்காக, இவர்கள் மீது தேசியப் பாதுகாப்புச் சட்டம், சட்டவிரோத நடவடிக்கைகள் தடைச்சட்டம், இந்தியத் தண்டனைச் சட்டத்தின் தேசத்துரோகக் குற்றப்பிரிவு முதலானவற்றை ஏவியிருக்கிறது.  பீமா-கோரேகான் வழக்கில் தேசியப்புலனாய்வு முகமையின் தான்தோன்றித் தனமான நியாயமற்ற நடவடிக்கை மற்றும் அதிகாரவரம்பை விரிவாக்கிக்கொண்டே செல்வது ஆகியவை ஆட்சியாளர் களின் நடவடிக்கைகளை அம்பலப்படுத்தி யுள்ளது. இதேபோன்று, அலகாபாத் உயர்நீதிமன்றம், டாக்டர் கபீல்கான் மீது புனையப்பட்டிருந்த தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் ஷரத்துக்களை கைவிட்டதுடன், அவரைப் பிணையில் செல்ல உத்தரவு பிறப்பித்ததும் ஆட்சியாளர்களின் செயல்பாடுகளை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன. எல்லாவற்றுக்கும் மேலாக, இது ஜனநாயகத்தின் மீதும் நம் அரசமைப்புச் சட்டத்தின் மீதும் ஏவப்பட்டுள்ள கடும் தாக்குதலையும் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.தில்லிக் காவல்துறையினர் தங்கள்அரசியல் எஜமானர்களின் கட்டளைக்குக்கட்டுப்பட்டு இவ்வாறு இழிவான முறையில் நடவடிக்கை மேற்கொண்டிருப்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டிக்கிறது. அமைதியான முறையில் நடைபெறும் அரசியல் எதிர்ப்புக் கிளர்ச்சிகளை கிரிமினல்மயப்படுத்திடும் இத்தகைய நடவடிக்கைகளிலிருந்து மத்திய அரசுதன்னைத் தவிர்த்துக்கொள்ள வேண்டும்என்று வலியுறுத்துகிறது. பொய்க் குற்றச்சாட்டுகளின்பேரில் சிறைப்படுத்தப்பட்டுள்ள அரசியல்  கைதிகள்அனைவரையும்  நிபந்தனையற்றமுறை யில் விடுவித்திட வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலுவாகக் கோருகிறது.

 ஜனநாயகத்தின்மீது ஏவப்பட்டுள்ள இத்தகைய கோழைத்தனமான, கொடூரமான நடவடிக்கைகளுக்கு எதிராகக் கிளர்ந்தெழுமாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு நாடு முழுதும் உள்ள தனது கிளைகளை வலியுறுத்துகிறது.மேலும், அரசமைப்புச் சட்டத்தின் விழுமியங்களையும் ஜனநாயகத்தையும் பாதுகாத்திட உறுதிபூண்டிருக்கிற நபர்கள், அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகள்அனைத்தும் அரசின் இத்தகு இழிநட வடிக்கைக்கு எதிராகக் கிளர்ந்தெழ வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு கேட்டுக்கொள்கிறது.                (ந.நி.)