tamilnadu

img

நாட்டில் உள்ள கூட்டாட்சித்தத்துவம் கைகழுவப்படுகிறது

புதுதில்லி, ஆக.2-

மாநில அரசாங்கத்துடனான கூட்டாட்சித் தத்துவம் கைகழுவப்படுகிறது. மாநிலங்களின் கீழ் இருக்கின்ற சட்டம் – ஒழுங்கு என்பதனை இச்சட்டத்தின்மூலம் மத்திய அரசு எடுத்துக் கொள்கிறது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் இளமரம் கரீம் கூறினார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. வெள்ளியன்று காலை 2019ஆம் ஆண்டு சட்டவிரோத நடவடிக்கைகள் (தடைத்) திருத்தச் சட்டமுன்வடிவின்மீது இளமரம் கரீம் பேசியதாவது:

இந்தச் சட்டமுன்வடிவை மீண்டும் நான் எதிர்க்கிறேன். பயங்கரவாதத்தை ஒடுக்குகிறோம் என்ற பெயரால் இந்த அரசாங்கம் அரச பயங்கரவாதத்தை மக்கள் மீது கட்டவிழ்த்துவிட்டிருக்கிறது.

இது நிறைவேறும்போது, உள்துறை அமைச்சகம் நாட்டில் உள்ள எந்தவொரு நபரையும், அவர் எந்த மாநிலத்தில் இருந்தாலும், பயங்கரவாதி என்று அறிவித்திட முடியும். சம்பந்தப்பட்ட மாநில அரசாங்கத்திற்கு மத்திய அரசு அறிவிக்க வேண்டிய தேவை இல்லை. இதுதான் கார்ப்பரேட் கூட்டாட்சித் தத்துவத்தின் புதிய மாடலாகும். பயங்கரவாதி என்று அடையாளம் குத்தப்பட்ட நபரின் சொத்துக்களைப் பறிமுதல் செய்திட முடியும், இந்த அரசாங்கத்திற்கு எதிர்ப்பைத் தெரிவிக்கும் எந்த நபரையும் இந்த அரசாங்கம் தன்னிச்சையாக தன்விருப்பப்படி பயங்கரவாதி என அறிவிக்க முடியும். நாட்டின் நீதிபரிபாலன முறையின் அடிப்படைத் தத்துவமே (principle of jurisprudence) தலைகீழாக மாற்றியமைக்கப்பட்டிருக்கிறது. இந்தச் சட்டத்தின்கீழ் குற்றம் சாட்டப்பட்ட நபர்தான் தான் நிரபராதி என்று நிரூபிக்கவேண்டுமேயொழிய, குற்றத்தைச் சுமத்திய அரசுத்தரப்பு, தன் தரப்பில் சாட்சியங்களையோ, சான்றாவணங்களையோ தாக்கல் செய்து நிரூபிக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை.

இப்போதுள்ள நடைமுறை, குற்றஞ்சாட்டப்பட்டவர் குற்றச்சாட்டு சந்தேகமற நிரூபிக்கப்படும்வரை குற்றமற்றவராகக் கருதப்பட வேண்டும் என்பதாகும். ஆனால் இப்போது கொண்டுவரப்பட்டிருக்கிற சட்டம் அதை மாற்றி இருக்கிறது. அதாவது அவர் குற்றமற்றவர் என்று நிரூபிக்கப்படும்வரை அவரைக் குற்றம் செய்தவராகக் கருதப்பட வேண்டும் என்று கூறுகிறது. இது, மிகப்பெரிய அளவில் மக்களைத் துன்புறுத்திடவும், பழிவாங்கிடவும் அநீதி இழைத்திடவும் இட்டுச்செல்லும்.

மாநில அரசாங்கத்துடனான கூட்டாட்சித் தத்துவம் கைகழுவப்படுகிறது. மாநிலங்களின் கீழ் இருக்கின்ற சட்டம் – ஒழுங்கு என்பதனை இச்சட்டத்தின்மூலம் மத்திய அரசு எடுத்துக் கொள்கிறது.

நமக்கு, ‘பொடா’(POTA), ‘தடா’(TADA’) போன்ற கசப்பான அனுபவங்கள் உண்டு. 1994இல் ஏழாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் ‘தடா’-வின்கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்கள். 1990இல் குஜராத்தில் மட்டும் ‘தடா’-வின் கீழ் ஐயாயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டிருந்தார்கள். இவர்களில் பெரும்பான்மையினர் நம் நாட்டில் பெரிய அளவில் உள்ள சிறுபான்மை இனத்தவர்களாவார்கள்.

இந்தச் சட்டம் தேசியப் புலனாய்வு ஏஜன்சிக்கு எந்த மாநிலத்திற்கும் சென்று, அவர்கள் விருப்பு வெறுப்புக்கேற்ப எதுவேண்டுமானாலும் செய்திட வெளிப்படையாக உரிமம் (open licence) அளிக்கிறது. நம் அரசமைப்புச்சட்டத்தின் அடிப்படைக் கட்டமைப்பான கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிராக இது இருப்பதால் இது எதிர்க்கப்பட வேண்டியது அவசியமாகும்.

இந்தச் சட்டம் மேலும் என்ன சொல்கிறது என்றால், புலனாய்வு,  தேசியப் புலனாய்வு ஏஜன்சி மூலம் மேற்கொள்ளப்படுமானால், பின் அதில் பணியாற்றும் காவல் ஆய்வாளருக்குக் கீழ் நிலையில் உள்ள அதிகாரி கூட புலனாய்வு மேற்கொள்பவராக இருக்க முடியும் என்று கூறுகிறது.   

அதே சமயத்தில் இந்த அரசாங்கம் சில தீவிரவாத இயக்கங்களிடம் மிகவும் மென்மையான அணுகுமுறையைக் கொண்டிருக்கிறது. மிகவும் புகழ்பெற்ற இதழாளரும் மனித உரிமை ஆர்வலருமான கௌரி லங்கேஷ் மற்றும் முற்போக்கு கன்னட எழுத்தாளர் எம்.எம். கல்புர்கி ஆகியோர் சனாதன் சன்ஸ்தா என்று அழைக்கப்படும் அமைப்பினால் ஒரேவிதமான துப்பாக்கியைப் பயன்படுத்தி, சுட்டுக் கொல்லப்பட்டார்கள். இந்த அமைப்பை இந்த அரசாங்கம் ஒரு பயங்கரவாத அமைப்பு என்று ஏன் பட்டியலிடவில்லை?

நேற்றையதினம் அவர் ஒரு பெயரைக் குறிப்பிட்டார். மிகவும் பேர்போன (notorious) பயங்கரவாதி, மசூத் பெயரை அவர் குறிப்பிட்டார். இதே மசூத், பல ஆண்டுகளுக்கு முன் இந்திய சிறையில் இருந்தவர்தான். அப்போது, பாஜக கேபினட் அமைச்சர் ஒருவரால்தான் அவர் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார். பின்னர் அவரைப் பாதுகாப்புடன் கந்தகாருக்கு அழைத்துச் சென்றார்கள். அதை மறந்துவிட வேண்டாம். நீங்கள் பயங்கரவாதியைப் பற்றி பேசிக்கொண்டிருக்கிறீர்கள்!

இந்தச் சட்டமுன்வடிவு நிறைவேற்றப்பட்டபின், இந்த அரசாங்கம் சிலரை பயங்கரவாதிகள் எனப் பட்டியலிடலாம். பல்வேறுவிதமான அமைப்புகளுக்கும் பல்வேறுவிதமான அணுகுமுறைகள் பின்பற்றிக்கொண்டிருக்கின்றன. தாத்ரியில் முகமது அக்லாக் என்பவரைக் கொலை செய்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு என்ன நடந்தது? அவர் இந்த அரசாங்கத்தால் மத்திய பொதுத்துறை நிறுவனம் ஒன்றில் வேலை அளிக்கப்பட்டு கவுரவிக்கப்பட்டிருக்கிறார்.

இதுதான் இந்த அரசாங்கத்தின் அணுகுமுறை. எனவேதான் இந்தச் சட்டத்தை நீங்கள் கொண்டுவருகிறபோது இந்த நாட்டு மக்கள் பயப்படுகிறார்கள்.

இனிவருங்காலங்களில், நீங்கள் நாடாளுமன்றத்தில் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் பேசுகிற பேச்சுக்காகக்கூட அவரைப் பயங்கரவாதி என அறிவித்திடக்கூடிய விதத்தில் அரசமைப்புச்சட்டத்தில் திருத்தத்தைக் கொண்டுவருவீர்களோ என்று நான் வலுவாக உணர்கிறேன். உங்களுக்கு எதிராக எவர் கருத்துக்கூறினாலும் நீங்கள் பயப்படுகிறீர்கள்.

எதிர்க்கட்சியினர் உங்களுக்கு எதிராகப் பேசுவதை நீங்கள் விரும்பவில்லை. உங்களை நாங்கள் எதிர்ப்பதால் நீங்கள் எங்களை பயங்கரவாதிகள் என்றோ தேச விரோதிகள் என்றோ அழைத்திடலாம். ஆளும்கட்சித்தரப்பில் அமர்ந்திருக்கும் சக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஒன்றைத் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். உங்கள் எண்ணிக்கையைக் கண்டு நாங்கள் பயந்துவிடவில்லை. உங்கள் புஜபலத்தைக் கண்டு நாங்கள் பயந்துவிடவில்லை. உங்கள் பண பலத்தைக் கண்டு நாங்கள் பயந்துவிடவில்லை. இந்த நாட்டில் தனியொரு கம்யூனிஸ்ட்டாக நான் விடப்படும் நிலை ஏற்பட்டாலும்கூட நான் இந்தக் கொடுங்கோன்மை சட்டத்தை எதிர்ப்பேன். என் இறுதிமூச்சு உள்ளவரை இதனை நான் செய்திடுவேன். இந்த நாட்டு மக்கள் இதற்கெதிராக ஒன்றிணைந்து இக்கொடுங்கோன்மைச் சட்டத்தை எதிர்ப்பார்கள் என்று எனக்கு நிச்சயமாகத் தெரியும்.

இவ்வாறு இளமரம் கரீம் பேசினார்.

(ந.நி.)