புதுதில்லி:
மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (Union Public Service Commission) நடத்திய குடிமைப் பணிகளுக்கான தேர்வில் இஸ்லாமிய மாணவர்கள் அதிகளவில் தேர்ச்சி பெற்றிருப்பதாகவும், இதுஅரசுத்துறைகளுக்குள் இஸ்லாமியர் களின் படையெடுப்பு போல தெரிவதாகவும், இதன்பின்னால் தீவிரவாத இயக்கங்களின் சதி இருப்பதாகவும் இந்துத்துவா பேர்வழியான சுரேஷ் சவ்ஹான்கே விஷமத்தனமான கருத்தை தெரிவித்திருந்தார்.அத்துடன் தனது சுதர்ஷன் டிவி-யின் ‘பிந்தோஸ் போல்’ பகுதியில், ‘யுபிஎஸ்சி ஜிகாத்’ என்ற பெயரில் தொடர்நிகழ்ச்சி ஒன்றையும் ஒளிபரப்பினார்.சுரேஷ் சவ்ஹான்கே-வின் இந்த நிகழ்ச்சிக்கு, ஐபிஎஸ் அமைப்புகள், ஓய்வுபெற்ற ஐபிஎஸ், ஐஏஎஸ் அதிகாரிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்தது.ஜாமியா மிலியா இஸ்லாமியப் பல்கலைக்கழகத்தின் முன்னாள், இந்நாள் மாணவர்கள் சார்பில் சுதர்ஷன் சேனல் நிகழ்ச்சிக்குத் தடை விதிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மனுக்களை விசாரித்து, ‘பிந்தோஸ் போல்’ நிகழ்ச்சிக்கு செப்டம்பர்15 அன்று இடைக்கால தடையுத்தரவு பிறப்பித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், வெள்ளியன்று இவ்வழக்கில் இறுதித் தீர்ப்பு வழங்கியுள்ளனர்.அதில், ‘சுதர்ஷன் டிவி’யில், இஸ்லாமியர்களுக்கு எதிராக ஒளிபரப்பப்பட்டு வந்த‘யுபிஎஸ்சி ஜிகாத்’ என்ற நிகழ்ச்சிக்கு நீதிபதிகள் தடை விதித்துள்ளனர்.ஊடக சுதந்திரம் என்ற பெயரில், ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தையும் குறிவைத்து நிகழ்ச்சி ஒன்றை ஒளிபரப்புவதற்கு அனுமதிக்க முடியாது என்று நீதிபதிகள் டி.ஒய். சந்திரசூட், இந்து மல்கோத்ரா, கே.எம். ஜோசப் ஆகியோர் அடங்கிய அமர்வு குறிப்பிட்டுள்ளது.“ஊடகச் சுதந்திரம் என்ற வகையில், தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றுக்கு நாங்கள் இப்படி தடை விதிக்க விரும்பவில்லை. ஆனால் அதைத்தவிர தற்போது வேறு வழியில்லை. கடைசிக் கட்டமாக அணு ஆயுதத்தை பயன்படுத்துவது போன்றது இது.
ஏனெனில், இந்த நிகழ்ச்சி கட்டாயமாக தடை விதிக்கப்பட வேண்டிய ஒன்று.மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் இதை தடை செய்திருக்க வேண்டும். ஆனால் தடை செய்யவில்லை. மாறாக,நிகழ்ச்சிக்கு தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. நிகழ்ச்சி ஒளிபரப்பான பின்பும் கூட அதற்குஎதிராக அரசு நடவடிக்கை எடுத்திருக்கலாம். ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆகவே நாங்கள் இப்படி தடை விதிக்க வேண்டியது ஆகிவிட்டது. இது தவறான உதாரணமாகிவிடக் கூடாது என்பதே எங்கள் நோக்கம். இதைஉதாரணமாக வைத்துக் கொண்டு மற்ற நீதிமன்றங்களும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்க வாய்ப்புள்ளது. ஆனால், அப்படி ஒரு விஷயம் நடக்க கூடாது.
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் சுதந்திரத்திற்கு நீதித்துறை எப்போதும் மதிப்பளிக்கிறது. மீடியா சுதந்திரமாக செயல்பட வேண்டும். நாம் எமர்ஜென்சியை பார்த்து இருக்கிறோம். நமக்கு சுதந்திரத்தின் அருமை தெரியும். அதே சமயம் ஒரு
குறிப்பிட்ட மதத்தை குறி வைத்து இப்படிதாக்குதல் நிகழ்ச்சிகளை நடத்தக் கூடாது. ஒரு சாரரை இப்படி குறி வைக்கக் கூடாது”என்று நீதிபதிகள் தங்களின் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர்.
முன்னதாக விசாரணையில் பேசிய நீதிபதிகள், தீவிரவாத அமைப்பிடம் பணம்பெற்று சிவில் சர்வீஸ் பயிற்சி தரப்படுகிறதா? என்பது குறித்து சுதர்ஷன் டிவி புலனாய்வு செய்து, செய்தி வெளியிடுவதில் நீதிமன்றத்துக்கு எந்தச் சிக்கலும் இல்லை.
ஆனால், யுபிஎஸ்சி பணிக்கு முஸ்லிம்கள் குறிப்பிட்ட திட்டத்துடன்தான் சேர்கிறார்கள் என்று அடையாளப்படுத்துவதை அனுமதிக்க முடியாது என்று தெரிவித்தனர்.மேலும், ஒத்திசைவான மற்றும் பன்முகத்தன்மை கொண்ட எதிர்காலத் தேசத்தையே நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். மாறாக, இதுபோன்ற திட்டமிட்ட நிகழ்ச்சியுடன் குறிப்பிட்ட சமூகத்தினருக்கு எதிராக நாடு இயங்க முடியாது. சமூகத்தில் பிரித்தாளும் திட்டத்தை ஏற்க முடியாது என்று குறிப்பிட்ட நீதிபதிகள், அவசரக் காலத்தில் நடப்பது குறித்து கண்காணிக்கவே நீதிமன்றமாகிய நாங்கள் இருக்கிறோம். மனிதர்களின் சுயமரியாதையைப் பாதுகாக்க வேண்டியது நீதிமன்றத்தின் கடமை எனவும் கூறியுள்ளனர்.