சிதம்பரம்:
காட்டுமன்னார் கோவில் அருகே பட்டாசு ஆலையில் வெள்ளியன்று ஏற்பட்ட வெடிவிபத்தில் 9 பெண் தொழிலாளர்கள் கருகி பலியாகினர்.கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் அருகே குருங்குடி கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான பட்டாசு ஆலை உள்ளது. கனகராஜ் அவரது மனைவி காந்திமதி பெயரில் இயங்கி வரும் இந்த ஆலையில் நாட்டு பட்டாசுகளை தயாரித்து வருகின்றனர்.
தீபாவளியை முன்னிட்டு பட்டாசு தயாரிப்புப்பணிகள் மும்முரமாக நடைபெற்று வந்துள்ளன. இப்பணியில் அதே கிராமத்தைச் சேர்ந்த 9 பெண்கள் ஈடுபட்டிருந்தனர். செப்டம்பர் 4 வெள்ளியன்று நாட்டு பட்டாசு தயாரிப்பின்போது திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் அந்த கட்டிடம் முழுமையாக இடிந்து விழுந்தது.மேலும் வெடி மருந்துகள் இருந்ததால் தீ விபத்து ஏற்பட்டதில் ஆலை உரிமையாளர் கனகராஜ் மனைவி காந்திமதி, தொழிலாளர்கள் மலர்கொடி , ராஜாத்தி , லதா, சித்ரா ஆகிய7 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி, கோரமான நிலையில் பல அடி தூரத்திற்கு தூக்கி வீசப்பட்டு உயிரிழந்தனர்.மேலும் படுகாயமடைந்த இரண்டு பெண்கள் காட்டுமன்னார்கோயில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
ஆட்சியர் ,போலீஸ் எஸ்.பி.
சம்பவம் நடந்த இடத்திற்கு கடலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்ரீ அபிநவ், மாவட்ட ஆட்சியர் ஆகியோர் உடனடியாக வருகை தந்தனர். இந்த ஆலைக்கு முறையான உரிமம் இல்லை என்று கூறப்படுகிறது. இதுகுறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.இதற்கிடையில் காட்டுமன்னார்கோயில் தீயணைப்புத்துறையினர், காவல்துறை யினர், வருவாய்துறையினர் மீட்புப்பணியில் ஈடுபட்டனர்.
சிபிஎம்- திமுக முன்னாள் அமைச்சர் ஆறுதல்
திமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் தேன்மொழி, மாவட்டக்குழு உறுப்பினர் பிரகாஷ் உள்ளிட்ட மார்க்கிஸ்ட் கட்சியினர் சம்பவ இடத்திற்கு வந்து, விபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கு ஆறுதல் கூறினர். ஒரே கிராமத்தைச் சேர்ந்த 9 பெண்கள் வெடிவிபத்தில் பலியானது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ரூ. 2 லட்சம் நிவாரணம்: முதல்வர்
இந்த வெடி விபத்தில் பலியானவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரி வித்துள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அவர்களது குடும்பத்திற்கு தலா 2 லட்சம்ரூபாய் வழங்கப்படும் என்றும் நிவாரண, மீட்புப்பணிகளுக்கு அனைத்து ஏற்பாடு களும் செய்யப்பட்டு இருப்பதாகவும் தமிழக அரசுவெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
சிபிஎம் கோரிக்கை
பட்டாசு விபத்து - உயிரிழப்பு குறித்து அதிர்ச்சியும் இரங்கலும் தெரிவித்துள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கடலூர் மாவட்டச் செயலாளர் டி.ஆறுமுகம், உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.10லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.