புதுதில்லி:
இந்தி பேசாத மாநிலங்களில், இந்திமொழியைப் பயில்வது கட்டாயம் என மத்திய அரசு கூறிவரும் நிலையில், “இந்தி குறித்து பெருமை அடித்துக் கொள்வோர் மிகப் பழமையான தமிழ் மொழியைக் கற்க வேண்டும்” என்று பாலிவுட் நடிகர் ஆயுஷ்மான் குரானா தெரிவித்துள்ளார்.
தமிழ்தான் உலகிலேயே மிகவும் பழமையான செம்மொழி என்றும், இந்தி மொழியை மிகவும் நேசிக்கும் ஒருவனாக, இதனைத் தான் கூறுவதாகவும் குரானா குறிப்பிட்டுள்ளார். கடந்த 2017ம் ஆண்டு, ‘இந்திய மொழிகள் குறித்து’ தான் எழுதிய கட்டுரையை ட்விட்டரில் அவர் பகிர்ந்துள்ளார்.அதில், “நாட்டின் வளர்ச்சி, ஒற் றுமை ஆகியவை கலாச்சாரத்தை ஒன்றிணைப்பதாலும், புதிய மொழிக் கொள்கையை உருவாக்குவதாலும் ஏற்பட்டு விடாது. இந்தியாவை அதனுடைய பன்முகத்தன்மையுடன் இருக்க விடுவது மட்டுமே அதற்கான வலிமை.
ஒரே நாடாக நாம் இணைந்திருக்க வேண்டுமானால் நீக்குப் போக்குடன் செயல்படுவது அவசியமாகும்” என ஆயுஷ்மான் குரானா தெரிவித்துள்ளார்.“நாட்டை வளப்படுத்துவதிலும், மேம்படுத்துவதிலும்தான் நமது நோக்கம் இருக்க வேண்டும்; பழக்கமில்லாத கலாச்சாரத்தில் புதிய கலாச்சாரத்தை திணிக்க முயல்வது பாரம்பரியங்களின் கூட்டமைப்பை குலைத்துவிடும்” என்றும் மோடி அரசை எச்சரித்துள்ளார்.