புதுதில்லி:
வறிய நிலையில் உள்ள காஷ்மீர் மக்களுக்கு மத்திய அரசு நிவாரணம் வழங்க மறுத்து வருகிறது என்றும் ஜம்மு-காஷ்மீருக்கு தூதுக்குழுக்கள் செல்வது பாஜக அரசால் நடத்தப்படும் நாடகமே என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி சாடினார்.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு அலுவலகமான ஏ.கே.கோபாலன் பவனில் புதன்கிழமையன்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி கூறியதாவது:
தில்லி வாக்காளர்கள், பாஜகவின் வெறுப்பு அரசியலுக்கு மரண அடி அளித்துள்ளதற்கு முதலில் வாழ்த்துக்களையும், பாராட்டுதல் களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.ஜம்மு-காஷ்மீர் இன்றைய நிலைமைகள் குறித்துப் பேசும்போது, அரசமைப்புச் சட்டத்தின் 370ஆவது பிரிவு ரத்து செய்யப்பட்டு ஆறு மாதங்கள் ஆகிவிட்டன. இதன் விளைவாக அம்மாநிலத்தின் பல்வேறு மனைகளிலும் கடும் பாதிப்புகள் ஏற்பட்டிருக்கின்றன. சுற்றுலாத் துறை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. விவசாயமும், தோட்டக்கலையும் கூட கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இணையத் தொடர்பு முற்றிலுமாகத் துண்டிக்கப்பட்டதன் காரணமாக, இணைவழி வியாபாரம் நடைபெறாததால், இங்கே விளையும் பயிர்களில் மிகவும் ஆதாயம் அளித்துவந்த குங்குமப்பூ விற்பனை கடும் வீழ்ச்சியடைந்தது. பொருளாதாரம் கடும் பாதிப்புக்கு உள்ளாகி, மக்களின் வாழ்நிலை மிகவும் வறிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது. மக்களுக்கு நிவாரணம் எதையும் அளிக்க மத்திய அரசு மறுத்துவருகிறது.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு தூதுக்குழு வந்துகொண்டும் போய்க்கொண்டும் இருக்கிறது. இன்றையதினம் கூட ஒரு தூதுக்குழு சென்றிருக்கிறது. இவை அனைத்துமே அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படும் நாடகங்க ளேயாகும். இவ்வாறு தூதுக்குழுவினர் வந்துவிட்டு சென்றபின் அங்குள்ள தலைவர்கள் மீது கொடூரமான சட்டங்கள் பாய்கின்றன. முன்னாள் முதலமைச்சர்கள் மெஹ்பூபா முப்தி மற்றும் உமர் அப்துல்லா ஆகியோர் மீது பொதுப் பாதுகாப்புச் சட்டம் பாய்ந்துள்ளது. இவர்களுடன் எண்ணற்றோர் இன்னமும் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், பாஜக, அங்கே இயல்புநிலை திரும்பிவிட்டதாக பீற்றிக்கொண்டிருக்கிறது. அரசமைப்புச்சட்டத்தின் 370 மற்றும் 35-ஏ ஆகிய பிரிவுகள் ரத்து செய்யப்பட்டது தொடர்பாக இறுதி முடிவை உச்சநீதிமன்றம் பிறப்பிக்கும் வரையிலும் தற்போதைய ஜம்மு-காஷ்மீர் நிர்வாகம் தனிநபர்களுக்கு நிலங்கள் அளிப்பது குறித்து எவ்வித நடவடிக்கையும் எடுக்கக்கூடாது.இவ்வாறு சீத்தாராம் யெச்சூரி கூறினார்.