கொச்சி:
வாளையாறு தலித் சிறுமிகள் பாலியல் வன்கொலையில் சிபிஐ விசாரணை கோரிய வழக்கில் கேரள உயர்நீதிமன்றம் தலையிட மறுத்துவிட்டது. விசாரணை நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவும் தலைமை நீதிபதியின் அமர்வு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கேரள மாநிலம் வாளையாறு பகுதியில் இரண்டு தலித் சிறுமிகள் பாலியல் வல்லுறவு செய்து கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளிகளை பாலக்காடு மாவட்ட நீதிமன்றம் விடுதலை செய்தது. இதற்கு எதிராக மலையாளிகள் அமைப்பின் தலைவர் ஜார்ஜ்வட்டகுளம் என்பவர் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் சிபிஐ விசாரணை கோரியிருந்தார். இந்த மனுதலைமை நீதிபதி மணிக்குமார் தலைமையிலான அமர்வு முன்பு வெள்ளியன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பு வழக்கறிஞர், பாலக்காடு செசன்ஸ் நீதிமன்ற தீர்ப்புக்குஎதிராக மேல்முறையீடு செய்ய அரசு முடிவு செய்துள்ளதாக தெரிவித்தார். செசன்ஸ் நீதிமன்றம் தீர்ப்பளித்த வழக்கு என்பதால் அதற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து, தொடர் விசாரணை நடத்த வேண்டும் என சிபிஐ தரப்பு வழக்கறிஞர் சுட்டிக்காட்டினார். உண்மையை புரிந்துகொள்ளாமல் ஊடக செய்திகளின் அடிப்படையிலான மனு என நீதிமன்றம் தெரிவித்தது. பொதுநல மனு அளிப்போர் உண்மைநிலையை கண்டறிய முயற்சிக்க வேண்டும். ஊடக செய்திகளின் அடிப்படையில் மட்டும் வழக்குகள் பதிவு செய்யக்கூடாது என உச்சநீதிமன்றம் ஏற்கனவே தெளிவு படுத்தியுள்ளது. குற்றவியல் சட்டங்கள் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கலாம். குழந்தைகளுக்கு எதிரான இத்தகைய வன்முறைகள் கவலை அளிப்பதாகும். விசாரணை அதிகாரியும் இரையாக்கப்பட்டோரின் உறவினர்களும் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யலாம் என நீதிமன்றம் தெளிவு படுத்தியது. இன்னும் இதுபோன்ற வழக்குகள் வரலாம் எனவும் எனவே மனுவை திரும்ப பெற அனுமதிக்க முடியாது எனவும், விரிவான உத்தரவு பிறப்பிக்கப்படும் எனவும் நீதிமன்றம் அறிவித்தது.