tamilnadu

img

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேச்சு நாட்டிற்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் வேலையில்லாத் திண்டாட்டம்தான்

புதுதில்லி, ஏப். 20 -தேசத்திற்கு உண்மையான ஆபத்து என்றால், அது வேலையில்லாத் திண்டாட்டம்தான் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார். இதை பிரதமர் மோடி கண்டுகொள்வதில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக ராகுல் காந்தி மேலும் கூறியிருப்பதாவது: தேசப்பாதுகாப்பு என்ற ஒரு விஷயத்தை முக்கியத் தேர்தல் ஆயுதமாக பாஜக பயன்படுத்துகிறது. ஆனால், நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்றால், அது அதிகரித்து வரும் வேலையில்லாத் திண்டாட்டம்தான் என்பதை அக்கட்சி உணர மறுக்கிறது.நகர்ப்புறம் மட்டும் அல்லாது, கிராமப்புற மக்களும் வேலையில்லாத் திண்டாட்டத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டம் நிலவுகிறது. விவசாயிகள் தாங்க முடியாத அவல நிலையில் வாழ்க்கையை கழித்து வருகின்றனர். கருத்துக் கணிப்பாளர்களும் கூட, வேலையில்லாத் திண்டாட்டம் நாடு சந்திக்கும் முக்கியப் பிரச்சனை என்பதை ஒப்புக் கொள்கின்றனர். ஆனால், நாட்டு மக்களின் வாழ்வாதாரத் தேவைகள் குறித்தும், வேலைவாய்ப்புக்கள் குறித்தும் பாஜக, தனது தேர்தல் அறிக்கையில் கூட எதையுமே பேசவில்லை. தேசப் பாதுகாப்பு, வாழ்வாதாரப் பாதுகாப்பு மற்றும் விவசாயிகள் - இளைஞர்களின் விருப்பங்கள் ஆகிய மூன்றுக்கும் இடையே தெளிவான ஒரு இணைப்பு இருக்கிறது. ஆனால், பிரதமர் மோடி இதனை ஒட்டுமொத்தமாக புறக்கணிக்கிறார்.காங்கிரஸ் தேர்தல் அறிக்கையையும் பாஜக தேர்தல் அறிக்கையையும் ஒப்பிட்டுப் பார்த்தால் இந்த உண்மையை மக்கள் புரிந்து கொள்ள முடியும்.இவ்வாறு ராகுல் கூறியுள்ளார்.