tamilnadu

img

மக்கள் ஒற்றுமை காக்க காந்தியுடன் கைகோர்த்த கம்யூனிஸ்ட்டுகள் - ஜி.ராமகிருஷ்ணன்

அண்ணல் காந்தியின் 150 வது பிறந்தநாள் இன்று.  நாடே காந்தியைக் கொண்டாடுகிறது.  தேச சுதந்திரத்திற்காக மட்டுமல்ல, மதநல்லிணக்கத்திற்காக, மதச்சார்பின்மைக்காக, மக்கள் ஒற்றுமைக்காக, மனித மாண்புகளுக்காக மனித உரிமைகளுக்காக, பொது வாழ்வில் தூய்மைக்காக தமது வாழ்க்கையையே அர்ப்பணித்தார் என்பதற்காக அனைத்துப் பகுதி மக்களாலும், அனைத்து இயக்கங்களாலும் கொண்டாடப்படுகிறார் காந்தி. நாடும் நாட்டு மக்களும் இன்று சந்திக்கும் பல பிரச்சனைகளை எதிர்கொள்ள அண்ணல் காந்தி  இன்றும் தேவைப்படுகிறார். நாடு விடுதலை அடைந்து, இந்தியா - பாகிஸ்தான் பிரிவினை ஏற்பட்டு, தேசத்தின் பல பகுதிகளில் இந்து – முஸ்லீம் மதக்கலவரம் வெடித்தது. எண்ணில் அடங்கா உயிர்ச் சேதம் ஏற்பட்டது. மனிதனை மனிதன் வெட்டி மாய்த்துக் கொள்ளும் கோரச் சம்பவங்கள் நடந்தன. 

1931ம் ஆண்டு லண்டனில் வட்டமேசை மாநாட்டில் இந்தியா சார்பாக கலந்து கொண்ட போது காந்தியை ‘அரைநிர்வாணப் பக்கிரி’ என சர்ச்சில் இழி நோக்குடன் வர்ணித்தார். சுதந்திரத்திற்குப் பிறகு நாட்டின் பல பகுதிகளில் மதக்கலவரங்கள் நடந்ததை சுட்டிக்காட்டி ”தங்களுடைய நாட்டை ஆள்வதற்கு இந்திய மக்கள் சிறிதளவும் தகுதி படைத்தவர்கள் அல்லர்” என ஆணவத்துடன் சர்ச்சில் பேசினார்.  சர்ச்சிலின் கூற்று காந்தியின் காதுகளுக்கு எட்டிய போது “இந்தியா இப்படிப்பட்ட பயங்கரமான நிலையை எதிர்கொள்ளும் என அவருக்கு முன்பே தெரியும்.  இதற்கான முழுப்பொறுப்பு பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கி யவர்களையே சாரும்” என காந்தி, சர்ச்சிலை இடித்துரைத்தார். மேலும் “இப்படிப்பட்ட கருத்தினை சர்ச்சில் கூறுவதற்கு நம்மில் பலரும் இடம் கொடுத்து விட்டோம். நம்முடைய வழிமுறைகளை சீர்திருத்திக் கொள்வதன் மூலம் சர்ச்சில்  கூறியது தவறு என நிருபிப்போம் என்றார் காந்தி. சொல்வதோடு நிறுத்தாமல் செயலில் இறங்கினார். 

கல்கத்தாவில் நடந்தது என்ன?

எங்கெல்லாம் மதமோதல்கள் ஏற்பட்டதோ அங்கெல்லாம் காந்தி சென்றார். மோசமான மதக் கலவரம் நடந்து கொண்டிருந்த நவகாளிக்கு செல்வதற்காக 1947  செப்டம்பர் மாதத்தில் கல்கத்தா நகரத்திற்கு சென்றார். அந்நகரத்திலேயே பல பகுதிகளில் மதக் கலவரம் நடைபெற்றதால் நவகாளிக்கு செல்லாமல் கல்கத்தாவிலேயே செப்டம்பர் 1 அன்று காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை துவக்கி விட்டார். வங்காளத்தின் கவர்னர் ஜெனரலாக இருந்த ராஜாஜி அவர்கள், காந்திஜியை சந்தித்து “ நீங்கள் உண்ணாவிரதத்தில் ஈடுபட  வேண்டுமா? ஒருவேளை நீங்கள் இறந்து விட்டால் காட்டுத் தீ மிகவும் மோசமான  முறையில் பரவும்.  உண்ணாவிரதத்தை கைவிடுங்கள்” என கேட்டுக் கொண்டார். “நல்லவேளையாக அதனைப் பார்க்க நான் உயிருடன் இருக்க மாட்டேன்” என்று சொல்லிவிட்டு உண்ணாவிரதத்தைத் தொடர்ந்தார் காந்திஜி.

இந்த சமயத்தில் மகத்தான கம்யூனிஸ்ட் தலைவர்களான ஜோதிபாசுவும், பூபேஷ் குப்தாவும் காந்தியை சந்தித்து, நீங்கள் உண்ணாவிரதத்தை கைவிட வேண்டுமானால் நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று கேட்டனர். அதற்கு காந்தி, வீதி வீதியாகச் சென்று இந்து-முஸ்லிம் மக்களை திரட்டி மத நல்லிணக்க ஊர்வலங்களை நடத்துங்கள்; மத மோதல்களை முடிவுக்கு கொண்டு வாருங்கள் என்று வேண்டுகோள் விடுத்தார். அதை ஏற்று கம்யூனிஸ்ட் தலைவர்கள், வங்காளம் முழுவதிலும் மத நல்லிணக்க ஊர்வலங்களை நடத்தினார்கள். மக்களை ஒன்றுபடுத்தினார்கள். கலவர பூமியில் அமைதி தவழ அரும்பாடுபட்டார்கள்.  அடுத்த சில தினங்களில் கலவரம் ஓய்ந்தது. கல்கத்தாவில் அமைதி திரும்பியது. ராணுவத்தால் சாதிக்க முடியாததை உண்ணாவிரதப் போராட்டத்தால் காந்திஜி சாதித்ததாக கவர்னர் ஜெனரல் மவுண்ட் பேட்டன் குறிப்பிட்டார்.  மத மோதல் கூடாது; மனிதனை மனிதன் மாய்த்துக் கொள்ளக் கூடாது; மத நல்லிணக்கம் வேண்டும்; மதச்சார்பின்மை பாதுகாக்கப்பட வேண்டும் - என்று  உயிரையே பணயம் வைத்து அண்ணல் காந்திஜி நாட்டின் பல பகுதி களுக்குச் சென்று மக்கள் ஒற்றுமையை வலியுறுத்தினார்.  விடுவார்களா மத வெறியர்கள்? மதமோதல்களை உருவாக்கி அதன் மூலம் அரசியல் ஆதாயம் தேட முற்பட்ட ஆர்.எஸ்.எஸ்காரர்கள் காந்தியை கொன்றே விட்டார்கள். 
 

காந்தி இன்று இருந்திருந்தால்... 

இந்திய தேசத்தில் மக்கள் ஒற்றுமையைக் காக்க, மதநல்லிணக்கத்திற்காக, மனித நேயத்திற்காக உயிரையே தியாகம் செய்தவர் தான் அண்ணல் காந்தி. இத்தகைய மாமனிதர் இன்று நம்மோடு இருந்திருந்தால், இன்றைக்கு  ‘வேற்றுமையில் ஒற்றுமை’ காணும் இந்திய மக்களை ஒரே நாடு, ஒரே மதம், ஒரே மொழி, ஒரே கலாச்சாரம் என்ற ஒற்றை அடையாளத்தை திணித்து, அவர்களது ஒற்றுமையைச்   சிதைக்க பாஜக அரசு மேற்கொண்டு வரும் கொடிய முயற்சிகளுக்கு எதிராக களம் கண்டிருப்பார். 
அன்றைக்கு காந்தியின் வேண்டுகோளை ஏற்று, வங்கத்தில் அமைதி திரும்ப கம்யூனிஸ்ட்டுகள் களம் கண்டார்கள். இன்றைக்கு காந்தி இல்லாத நிலையில், பாஜக மற்றும் சங் பரிவார அமைப்புகளின் மதவெறியை எதிர்த்தும், ஊழல் மற்றும் சமூகக் கேடுகளை எதிர்த்த போராட்டங்களை மிகப்பெரும் வீரியத்துடன் கம்யூனிஸ்ட்டுகளே நடத்தி வருகிறார்கள். காந்தி இருந்திருந்தால் இந்தப் போராட்டங்களில் கம்யூனிஸ்ட்டுகளோடு கரம் கோர்த்து, தேசமெங்கும் கோடிக்கணக்கான மக்களை அதில் அணிதிரட்ட அழைப்பு விடுத்திருப்பார்.