புதுதில்லி:
கடந்த 3 ஆண்டுகளாகவே இந்திய பொருளாதாரம் சரிவில் இருந்து வந்தது. இந்நிலையில், திடீரென வந்த கொரோனா அதனை மேலும் மோசமாக சிதைத்துள்ளது.குறிப்பாக, எம்எஸ்எம்இ (MSME) எனப்படும் சிறு, குறு, நடுத்தர தொழிற்துறை முன்னெப்போதும் இல்லாத பாதிப்பைச் சந்தித்து இருப்பதாகவும், முன்பு 3 நிறுவனங்கள் இருந்தது என்றால், அவற்றில் ஒன்றைத் தற்போது மூட வேண்டிய நிலைஏற்பட்டுள்ளதாகவும் சர்வே ஒன்றில் தெரியவந்துள்ளது.
அகில இந்திய உற்பத்தியாளர் சங்கம்(All India Manufacturers Organisation - AIMO) மற்றும் ஒன்பது தொழிற்துறை அமைப்புகள் கூட்டாக சேர்ந்து ஆய்வு ஒன்றை நடத்தியுள்ளனர். எம்எஸ்எம்இ-க்கள்... அதாவது சிறு, குறு, நடுத்தர தொழில்முனைவோர், சுய தொழில் செய்பவர்கள், கார்ப்பரேட் தலைமை நிர்வாக அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் என மொத்தம் 46 ஆயிரத்து 525 பேரிடம் ஆன்லைனில் கருத்து கேட்டுள்ளனர்.மே 24 முதல் மே 30 வரை ஒருவாரம் இந்தஆய்வு நடைபெற்றுள்ளது.இதில்தான், சிறு குறு மற்றும் நடுத்தர(எம்எஸ்எம்இ)நிறுவனங்களை நடத்துவோரில் 35 சதவிகிதம் பேரும், சுய தொழில்செய்பவர்களில் 37 சதவிகிதம் பேரும்,தங்கள் நிறுவனங்கள் மீட்க முடியாதநிலைக்கு போய்விட்டதாக தெரிவித்துள்ளனர்.எம்எஸ்எம்இ-க்களில் 12 சதவிகிதம் பேர்மட்டும், தங்களது வணிகம் 3 மாதங்களில்மீட்சியடையும் என்று நம்பிக்கை வைத்துள்ளனர். 32 சதவிகித எம்எஸ்எம்-இக்கள் தங்களது தொழிலை மீட்க 6 மாதங்கள் ஆகும்என்று கூறியுள்ளனர்.
தற்போது நிலவி வரும் நிச்சயமற்ற தொழில் சூழல்; எதிர்காலத்திலும் ஆர்டர்களைப் பெற முடியுமா? என்ற கவலைஅவர்களை இந்த முடிவுக்கு தள்ளியிருப்பதாக சர்வே கூறுகிறது.பதிலளித்தவர்களில் பெரும்பாலானோர் ஏற்கெனவே கடந்த மூன்று ஆண்டுகளில் பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி நடவடிக்கைகளால் தங்கள் வணிகம் பாதிக் கப்பட்டு இருந்ததாக தெரிவித்துள்ளனர். அந்த வகையில் முன்பே பெரும் கடன்பிரச்சனையில் சிக்கித் தவித்த தாங்கள்,தற்போது கொரோனாவால் வணிகத் தையே முழுமையாக மூடும் அளவுக்கு வந்துவிட்டதாக கூறியுள்ளனர்.நாடு விடுதலை அடைந்ததற்கு பின்பு,இந்த அளவிற்கான மோசமான அழிவை நாங்கள் கண்டதில்லை என்று AIMO-வின்முன்னாள் தலைவர் கே.இ. ரகுநாதன் தெரிவித்துள்ளார். அதேநேரம், கார்ப்பரேட் நிலைகளிலான நிறுவனங்கள் தரப்பிலிருந்து மட்டும் அதிக தன்னம்பிக்கையுடன் கருத்துக்கள் வெளிப்பட்டுள்ளன.