tamilnadu

img

ராமர் கோயில் கமிட்டி தலைவரான மோடியின் முன்னாள் உதவியாளர்...

புதுதில்லி:
பிரதமர் நரேந்திர மோடியின் முன்னாள் முதன்மை செயலாளரும், சங்-பரிவாருக்கு நெருக்கமான அதிகாரியுமான நிருபேந்திர மிஸ்ரா, அயோத்தியில் ராமர் கோயிலை நிர்மாணிப்பதற்கான குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.ராமர் கோயிலை கட்டுவதற்காக ஏற் படுத்தப்பட்டுள்ள ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையின் முதல்கூட்டம், மூத்த வழக்கறிஞர் கே. பராசரனின் குடியிருப்பில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், அறக்கட்டளையின் தலைவராக- ராம ஜென்மபூமி நியாஸின் தலைவர் நிருத்யா கோபால் தாஸ், பொதுச்செயலாளராக- விஸ்வ ஹிந்து பரிஷத்தின் துணைத் தலைவர் சம்பத் ராய் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதேபோல பொருளாளராக கோவிந்தாஸ் கிரி, ஆடிட்டராக வி.சங்கர் அய்யர் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.

இந்த கூட்டத்திலேயே, ராமர் கோயிலை நிர்மாணிப்பதற்கான கட்டுமானக் குழுவின் தலைவராக- மிக முக்கியமான பொறுப்பில் பிரதமர் நரேந்திர மோடியின் முன்னாள் முதன்மைச் செயலாளரான நிருபேந்திர மிஸ்ரா நியமிக்கப்பட் டுள்ளார். முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியான மிஸ்ரா, சங்-பரிவார் அமைப்புக்களுக்கும், பிரதமர் மோடிக்கும் நெருக்கமானவர் என்று கூறப்படுகிறது. அந்த வகையில், ராமர் கோயில் கட்டுமானப் பணிகளை பிரதமர் மோடி நேரடியாக மேற்பார்வை செய்வதற்கும், உரிய உத்தரவுகளைப் பிறப்பிப்பதற்கு ஏதுவாகவும் நிருபேந்திர மிஸ்ரா நியமிக்கப்பட்டுள்ளதாக அறக்கட்டளை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.