விவசாய வருமானத்திற்கென வரி சலுகைகள் இருப்பதால், கடந்த ஆண்டு விவசாய வருமானம் என கூறப்பட்டு கிட்டத்தட்ட 500 கோடி ரூபாய் வரி மோசடி செய்யப்பட்டுள்ளதை சிஏஜி கண்டுபிடித்துள்ளது.
இந்தியாவில் ஒரு தனி நபருக்கு, விவசாயத்தின் மூலம் வரும் வருமானத்திற்கு வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. இந்த வரி விலக்கு விவசாயிகளுக்கு ஊக்கம் அளிக்கப்படுவதற்காக ஒவ்வொரு வருடமும் பல ஆயிரம் கோடி ரூபாய் கணக்கில் காட்டப்பட்டு, முழுமையாக வரி விலக்கு அளிக்கப்படுகிறது. ஆனால், இந்த வரி விலக்கை பயன்படுத்தி, சிலர் தங்களது வருமானத்தை விவசாய வருமானமாகக் காட்டி வரி ஏய்ப்பு செய்துள்ளது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதிலும், கடந்த ஆண்டு மட்டும் சுமார் 500 கோடி ரூபாய் வரையில் வரி ஏய்ப்பு செய்யப்பட்டுள்ளதை, சிஏஜி (CAG - Conptroller and Auditor General) கண்டுபிடித்துள்ளது. அதே சமயம், கடந்த ஆண்டு விவசாய வருமானமாகக் காட்டப்பட்ட சுமார் 500 கோடி ரூபாய் வருமான கணக்குகளை, வருமான வரித்துறை சோதனை இடவில்லை என்றும் இந்த அறிக்கை கூறியுள்ளது. இது தவிர, ஏராளமான மோசடிகள் நடந்துள்ளதாகவும் சிஏஜி தெரிவித்துள்ளது.
அந்த அறிக்கையின் படி, 6,778 அறிக்கைகள் சந்தேகப்படும் படியாக உள்ளதாகவும், இதில் 1,527 அறிக்கைகளில் தேவையான ஆவணங்களும் இல்லாமலும், 716 அறிக்கைகளில் நிலம் குறித்த ஆவணங்கள் இல்லாமலும், குறிப்பாக 1,270 அறிக்கைகளில் விவசாய வருமானம் என்பதற்கான சரியான கணக்கு வழக்குகள் இல்லாமலும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா, தமிழகம் மற்றும் கர்நாடகம் ஆகிய மாநிலங்களில், இது போன்ற அறிக்கைகள் அதிகமாக தாக்கல் செய்யப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது. இதில் மகாராஷ்டிராவில் 484 விவசாய வருமான வரி அறிக்கைகளில், 303 (63%) அறிக்கைகள் தேவையான ஆவணங்கள் இல்லாமல் உள்ளது. இதை அடுத்து, தமிழகத்தில் 565 அறிக்கைகளில், 286 (50%) அறிக்கைகளும், கர்நாடகத்தில் மொத்தம் 502 வழக்குகளில் 229 வழக்குகளில் (45%) சரியான ஆவணம் இல்லாமல் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், தகுதி வாய்ந்த கணக்குதாரர்களுக்கு எப்படி வரி விலக்கு அளிக்கப்படுகிறது என்றும் மதிப்பீட்டு அதிகாரிகள் தெளிவாகக் அறிக்கைகளில் குறிப்பிடவில்லை என்றும் கூறப்படுகிறது. குறிப்பாக மகாராஷ்டிராவில் எந்த ஒரு ஆவணமும் இன்றி வருமான வரித்துறை எந்த ஒரு சோதனையும் இன்றி ஏற்றுக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் கணக்கில் வராத வருமானத்தை விவசாய வருமானம் என கணக்கு காட்டியிருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.
மேலும் இது போன்ற மோசடிகளை தடுக்க, வருமான வரித் துறை 10 லட்சம் ரூபாய்க்கும் மேல் விவசாய வருமானம் காட்டும் இடங்களை சோதனை செய்திருக்க வேண்டும். இவ்வாறு சோதனை நடத்தப்படுவதன் மூலம் விவசாயிகளுக்கு கிடைக்க வேண்டிய சலுகை சரியாக கிடைக்கும். இதுபோன்ற மோசடிகளை தவிர்க்க முடியும் என்றும் கூறப்பட்டுள்ளது.