tamilnadu

img

மோடியின் பாதுகாப்புக்கு பட்ஜெட்டில் ரூ. 600 கோடி... கடந்தாண்டை விட ரூ. 60 கோடி அதிகம்

புதுதில்லி:
பிரதமர் நரேந்திர மோடியின் பாதுகாப்புக்கு மட்டும், மத்திய பட்ஜெட்டில் ரூ. 600 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டு பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டதைக் காட்டிலும்ரூ.60 கோடி அதிகமாகும்.முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலைக்குப் பிறகு, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோருக்கு கடந்த 28 ஆண்டுகளாக எஸ்.பி.ஜி. (Special ProtectionGroup) பாதுகாப்பு அளிக்கப்பட்டுவந்தது. இந்நிலையில் அவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த எஸ்.பி.ஜி. பாதுகாப்பை மத்திய அரசு கடந்த ஆண்டு திரும்பப் பெற்றது. முன்னாள் பிரதமர் மன் மோகன் சிங், தேவகவுடா ஆகியோருக்கான எஸ்.பி.ஜி. பாதுகாப்பும் விலக்கிக் கொள்ளப்பட்டது.தற்போது 3 ஆயிரம் பேர் கொண்டஎஸ்.பி.ஜி. குழு பிரதமர் நரேந்திரமோடி ஒருவருக்கு மட்டுமே பாதுகாப்பு வழங்கி வருகிறது.

இந்நிலையில் 2020-21 நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட் டில், பிரதமர் மோடிக்கு மட்டுமே பாதுகாப்பு அளிக்கும் சிறப்புப் பாதுகாப்புப் படைப்பிரிவுக்கு ரூ.600 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த 2018-19 பட்ஜெட்டில் ரூ. 420 கோடியாக இருந்த எஸ்.பி.ஜி.படைப்பிரிவுக்கான நிதி ஒதுக்கீடு, 2019 - 20 நிதியாண்டில் ரூ. 540 கோடியாக உயர்த்தப்பட்டது. தற்போது 2020-21இல் கூடுதலாக ரூ.60 கோடி ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது.