tamilnadu

img

மகாத்மா காந்திமீது நம்பிக்கையில்லாத கட்சியே பாஜக -நூற்றுக்கணக்கான அறிஞர்கள், அறிவுஜீவிகள், கலைஞர்கள் அறிக்கை


புதுதில்லி, மே 18-

ஆட்சியிலுள்ள பாஜகவும், பிரக்யாசிங் தாகூர் உட்பட அதன் உறுப்பினர்கள் பலரும் காலனி எதிர்ப்புப் போராட்டத்தின் மீதும், காலனி எதிர்ப்புப் போராட்டத்தின் விளைவாக விளைந்த அரசமைப்புச்சட்டத்தின் மீதும் மற்றும் அவற்றை முன்னின்று நடத்திய மகாத்மா காந்தி மீதும் நம்பிக்கையில்லாதவர்களே என்ற முடிவுக்கே வரவேண்டியிருக்கும் என்று நூற்றுக்கும் மேலான கல்வியாளர்கள், அறிவுஜீவிகள், கலைரஞர்கள் தெரிவித்துள்ளார்கள்.

பிரபாத் பட்நாயக், இர்பான் ஹபீப், மதன்கோபால் சிங்,. டி.என்.ஜா, சி.பி. சந்திர சேகர், சசிகுமார், ஆதித்யா முகர்ஜி, அமர் பரூக்கி, அனுராதா கபூர், அர்பனா கவுர், ஜெயதி கோஷ், அர்ச்சனா பிரசாத் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கூட்டாக ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில் கூறப்பட்டிருப்பதாவது:

 மகாத்மா காந்தியைப் படுகொலை செய்த நாதுராம் கோட்சேயைத் “தேச பக்தன்” என்று புகழ்ந்திடும் போபால் மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் பிரக்யா சிங் தாகூரின் அறிக்கை எங்களை மிகவும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது. இது மகாத்மா காந்தியைக் கொன்ற செயலை, ஒரு “தேச பக்த நடவடிக்கை” அல்லது நாட்டுப்பற்று என்று கூறுவதாக ஆகிறது. பிரக்யா தாகூரின் கருத்துக்களிலிருந்து பாஜக தன்னை சம்பந்தப்படுத்திக்கொள்ளாமல் ஒதுங்கிக் கொண்டால் மட்டும் போதாது அல்லது அவரை மன்னிப்புக் கோரச் சொன்னால் மட்டும் போதாது. இது அவருடைய நிலைப்பாடு என்பது தெளிவு. அவர் என்ன கூறினார் என்பதைத் தற்போதைக்கு மூடி மறைப்பதன் மூலம் எவ்விதப் பயனும் ஏற்படப்போவதில்லை.

இதில் இதற்கிணையாக அதிர்ச்சியளிக்கக்கூடிய சங்கதி என்னவெனில், பிரக்யா தாகூரின் கருத்தை ஆமோதித்தும் அவர் கூறியதற்கு ஆதரவாகப் பாஜகவினர் பலர் முன்வந்திருப்பதுதான். பிரக்யா தாகூரின் கருத்துக்கும் அதற்கு ஆதரவாக கருத்துக்களை வெளியிட்டிருக்கும் நபர்களுக்கும் எதிராக பாஜக   பொதுவெளியில் மன்னிப்பு கோர வேண்டும், அவர்கள் மீது உரிய தண்டனை நடவடிக்கை எடுத்திட வேண்டும். இல்லையேல், தற்போது ஆட்சியில் அமர்ந்துள்ள கட்சியான பாஜக, காலனியாதிக்க போராட்டத்தில் நம்பிக்கையில்லாத கட்சி என்றும், அந்தப்போராட்டத்தின் விளைவாக உருவான அரசமைப்புச் சட்டத்தின் விழுமியங்களில் நம்பிக்கையில்லாத கட்சி என்றும், அந்தப் போராட்டத்தினை முன்னின்று நடத்தியே நாட்டின் தந்தை எனப் போற்றப்படும் மகாத்மா காந்தியின் மீதும் நம்பிக்கை இல்லாத கட்சி என்றும்தான் முடிவுக்கு வரவேண்டியிருக்கும். இதிலிருந்து அக்கட்சி தப்பவே முடியாது.

இவ்வாறு கல்வியாளர்கள், அறிவுஜீவிகள், கலைத்துறையினர் தங்கள் அறிக்கையில் தெரிவித்துள்ளார்கள்.

(ந.நி.)