tamilnadu

img

‘தீவிரவாத’ நிறுவனங்களிடம் பாஜக வாங்கிய ரூ. 20 கோடி!

புதுதில்லி:
தீவிரவாத தொடர்புடைய நிறுவனம் என்று அமலாக்கத்துறையால் விசாரிக்கப்பட்டு வரும் நிறுவனத்திடம் இருந்து, பாஜக பல கோடி ரூபாயைத்தேர்தல் நன்கொடையாக பெற்றி ருப்பது அம்பலமாகியுள்ளது.1993-ஆம் ஆண்டு மும்பை குண்டுவெடிப்பு விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்டவர், ‘நிழலுலக தாதா’ என்று அழைக்கப்படும் தாவூத் இப்ராகிம். இவரின் நெருங்கிய உதவியாளர் இக்பால் மேமன் என்ற இக்பால் மிர்ச்சி.இவரிடமிருந்து ஆர்கேடபிள்யு (RKW) டெவலப்பர்ஸ் நிறுவனத்துக்கு பணப்பரிவர்த்தனை நடைபெற்றது குறித்த புகாரில் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது.

இந்நிலையில், இக்பால் மேமன்தொடர்புடைய ஆர்கே டபிள்யு டெவலப்பர்ஸ் நிறுவனத்திடமிருந்து, தேர்தல் நன்கொடை பெற்றிருப்பதாக, தேர்தல் ஆணையத்திடம் பாஜக அறிக்கை தாக்கல் செய்துள்ளது. அதாவது, ஆர்கேடபிள்யு டெவலப்பர்ஸ் நிறுவனமானது,  2014 - 2015ஆம் ஆண்டில் பாஜக-வுக்கு 10 கோடி ரூபாய் நன்கொடை அளித்துள்ளது.ஆர்கேடபிள்யு நிறுவனத்தின் முன்னாள் இயக்குநரான ரஞ்சித் பிந்த்ரா, இக்பால் மேமனின் நிறுவனத்துடன் இணைந்து முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளதாக  அமலாக்கத்துறை யால் கைது செய்யப்பட்டுள்ளார். இக்பால் மேமனுக்கும், ஆர்கேடபிள்யு நிறுவனங்களுக்கும் இடையிலான ஒப்பந்தங்களில் ஈடுபட்ட ரஞ்சித் பிந்த்ராவை ‘ஏஜெண்ட்’ என்றே அமலாக்கத்துறை குறிப்பிட்டுள்ளது.அந்த ரஞ்சித் பிந்த்ராவின் ஆர்கேடபிள்யு டெவலப்பர்ஸ் நிறுவனத்திடம்தான் பாஜக ரூ. 10 கோடி தேர்தல் நிதி பெற்றுள்ளது.

அதேபோல, இக்பால் மேமனின் சொத்துகளை வாங்கியதாக அமலாக்க த்துறையால் குற்றம்சாட்டப்பட்ட நிறுவனம் ‘சன்பிளிங்க் ரியல் எஸ்டேட்’ஆகும். மெஹூல் அனில் பவிஷி என்பவர் இந்நிறுவனத்தின் இயக்குநராக இருக்கிறார். இவர் ‘ஸ்கில் ரியல் எஸ்டேட் பிரைவேட் லிமிடெட்’ என்ற நிறுவனத்திற்கும் இயக்குநராக உள்ளார். இந்நிலையில், ஸ்கில் ரியல் எஸ்டேட் நிறுவனத்திடமும் பாஜக 2 கோடி ரூபாய் நன்கொடை பெற்றுள்ளது.இத்துடன் பாஜக-வின் வசூல் முடிந்து விடவில்லை.ஆர்கேடபிள்யு டெவலப்பர்ஸ் நிறுவனத்தின் இயக்குநராக தற்போது இருப்பவர் பிளாசிட் ஜேக்கப் நரோன்ஹா. இவர், ‘தர்ஷன் டெவலப்பர்ஸ் பிரைவேட் லிமிடெட்’ நிறுவனத்தின் இயக்குநராகவும் உள்ள நிலையில், இந்த தர்ஷன்நிறுவனத்திடமும் 2016-17ஆம் ஆண்டில்பாஜக 7 கோடியே 50 லட்சத்தை நன்கொடையாக பெற்றுள்ளது. இவ்வாறு தீவிரவாத தொடர்புடைய நிறுவனங்களிடமிருந்து, மொத்தம் 20 கோடி ரூபாயை, தேர்தல் நிதியாக பாஜக பெற்றுள்ளது என்று எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் குற்றச்சாட்டைக் கிளப்பியுள்ளன.அரசியல் கட்சிகள் நன்கொடை பெறுவதை எளிமைப்படுத்துவதாக ‘தேர்தல்நிதிப் பத்திரம்’ எனும் திட்டத்தை கடந்தஆண்டு, மத்திய பாஜக அரசு அறிவித்தது. அப்போதே இதற்கு எதிர்ப்பு எழுந்தது. கறுப்புப் பணத்தை பாஜக-வுக்கு கொண்டு வரவே, தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடை பெறும்முறையை பாஜக  அறிமுகப்படுத்து வதாக எதிர்க்கட்சிகள் கூறின. 

மார்ச் 2018-இல் முதன்முதலில் தேர்தல் பத்திரங்கள் விற்பனை மற்றும் நன்கொடை மூலம் அரசியல் கட்சிகள் 222 கோடி ரூபாய் நன்கொடைபெற்றன. இதில், 95 சதவிகிதத் தொகை பாஜக-வுக்கு மட்டுமே கிடைத்தது. இது எதிர்க்கட்சிகளின் சந்தேகத்தை வலுவாக்கி யது.இந்நிலையில்தான், தீவிரவாதத் தொடர்பு குற்றச்சாட்டுக்கு ஆளான நிறுவனங்களிடமும் கூட பாஜக பல கோடி ரூபாய்களை நன்கொடையாகப் பெற்றது அம்பலத்திற்கு வந்துள்ளது.தீவிரவாதம், கறுப்புப் பணத்தை ஒழிக்கவே, 2016-இல் பணமதிப்பு நீக்கநடவடிக்கை மேற்கொண்டதாக மத்தியபாஜக அரசு கூறியது. அந்த வகையில்,பணமதிப்பு நீக்கத்திற்கு பிந்தைய தீவிரவாத நடவடிக்கைகள் குறித்து, தெற்காசியத் தீவிரவாத ஒழிப்பு அமைப்பு அண்மையில் புள்ளி விவரம் ஒன்றை வெளியிட்டிருந்தது.அதில், 2015-ஆம் ஆண்டை விட2016, 2017, 2018 ஆகிய ஆண்டுகளில் இந்தியாவில் தீவிரவாத நடவடிக்கை கள் அதிகரித்துள்ளதாக கூறப்பட்டிருப்பதும் இங்கு நினைவுகூரத் தக்கது. 2015-ஆம் ஆண்டில் தீவிரவாத நடவடிக்கைகளால் மொத்தம் 728 பேர் உயிரிழந்திருந்த நிலையில், இந்த எண்ணிக்கை 2016-இல் 905 ஆகவும், 2017-இல் 812 ஆகவும், 2018-இல் 940 ஆக அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.