புதுதில்லி:
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக் காக பெறப்படும் பிரதமர் நிவாரண நிதி(PM-CARES) முறையாக தணிக்கைசெய்யப்பட வேண்டும் என காங்கிரஸ்தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.
பிரதமர் நிவாரண நிதி என்ற அமைப்பு,ஏற்கெனவே நடைமுறையில் இருக்கும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடியை தலைவராகக் கொண்டு ‘பி.எம் கேர்ஸ் அறக்கட்டளை’ (PM-CARES) என்ற புதியஅமைப்பு, மார்ச் 28 அன்று அமைச்சரவையால் ஏற்படுத்தப்பட்டது. அமைச்சரவையின் மூத்த உறுப்பினர்கள் அறங்காவலர் களாக நியமிக்கப்பட்டனர்.இந்த ‘பிஎம்-கேர்ஸ் அறக்கட்டளை’-க்குத்தான் தற்போது கொரோனா நிவாரணப் பணிக்காக நாடு முழுவதும் இருந்து,கார்ப்பரேட் நிறுவனங்கள், ரயில்வே உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்கள், சினிமா, விளையாட்டுத்துறையைச் சேர்ந்த பிரபலங்கள், நடுத்தர வர்க்கத்தினரிடம் இருந்து நன்கொடைகள் வந்து கொண்டிருக்கின்றன.கொரோனாவால் தொழில் முடக்கம் என்று கூறி, ஆட்குறைப்பு, ஊதியம் குறைப்பு போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் நிறுவனங்கள் கூட, புதிதாக ஏற்படுத்தப்பட்ட பிரதமரின் நிவாரண நிதிக்கு தாராளமாக பணத்தை அள்ளிக் கொடுத்து வருகின்றன.800 ஊழியர்களுடன் இயங்கி வரும் பிரபல உடற்பயிற்சி நிறுவனம் ஒன்று, கொரோனா காலத்தில் பல கிளைகளை மூடி உள்ளது. ஊழியர்களுக்கான அவசர நிதியாக 2 கோடி வழங்கி உள்ளது. ஆனால் இதே நிறுவனம் பி.எம். கேர்ஸ்மற்றும் பல்வேறு நிவாரண நிதிகளுக்கு மட்டும் ரூ. 5 கோடி வழங்கி தாராளம் காட்டியுள்ளது. முகேஷ் அம்பானியின் ‘ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்’, பி.எம்-கேர்ஸுக்குரூ.500 கோடி வழங்கியுள்ளது.
இந்நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக பெறப்படும் பிரதமர்நிவாரண நிதி (PM-CARES) சுயேச்சையான ஆடிட்டர் மூலம் தணிக்கை செய்யப்பட வேண்டும் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.பி.எம். கேர்ஸ் போன்ற நன்கொடை அடிப்படையிலான நிதி எந்தவொரு சட்டத்தின் அல்லது நாடாளுமன்றத்தின் சட்டத்தின் கீழ் வராது. ஏனெனில் இது நாட்டின் ஒருங்கிணைந்த நிதியத்தின் ஒருபகுதியாக இல்லை. இந்த நிதி நன்கொடைகளை அடிப்படையாகக் கொண்டிருப்பதால், தணிக்கை செய்ய உரிமை இல்லைஎன்று சிஏஜி அலுவலகமும் கூறியிருந்தது.இதனை மனத்தில் கொண்டே, பிரதமர்நிவாரண நிதியை முறையாக தணிக்கை செய்வது அவசியம். கொரோனா தடுப்புநடவடிக்கைகளுக்கான செலவு விவரங்கள் மக்களுக்கு தெரியப்படுத்தப்பட வேண்டும் என ராகுல் காந்தி கூறியுள்ளார்-