tamilnadu

img

‘அசோக் சக்ரா’ விருது பெற்ற தியாகியை அவமதிப்பதா?

புதுதில்லி:

தனது சாபத்தாலேயே ஐபிஎஸ் அதிகாரி ஹேமந்த் கார்கரே மரணமடைந்தார் என்று பாஜக வேட்பாளர் பிரக்யா சிங் தாக்குர் கூறியதற்கு, பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன.

இந்நிலையில், பிரக்யா சிங் தாக்கூரின் பேச்சை, ஐபிஎஸ் அதிகாரிகள் சங்கமும் கண்டித்துள்ளது.மும்பை பயங்கரவாதத் தடுப்புப் படை அதிகாரியாக இருந்தவர் ஹேமந்த் கார்கரே. 2008-ஆம் ஆண்டு, மாலேகானில் இஸ்லாமியர்கள் 7 பேர் வெடிகுண்டு வைத்து கொல்லப்பட்டபோது, இச்சம்பவத்தில் இந்துத்துவ பயங்கரவாதிகளின் சதி இருப்பதை புலனாய்வு செய்து கண்டுபிடித்தவர்தான் ஹேமந்த கார்கரே. பெண் சாமியார் பிரக்யா சிங் தாக்கூர் உள்ளிட்டவர்களின் கொடூரப் பின்னணி அப்போதுதான் வெளியுலகுக்கு தெரியவந்தது.

எனினும், அதே 2008- ஆம் ஆண்டு டிசம்பரில், பாகிஸ்தான் பயங்கரவாதிகள் மும்பையில் தாக்குதல் நடத்தியபோது, ஹேமந்த் கார்கரே அவர்களுடன் சண்டையிட்டு தனது உயிரைப் பறிகொடுத்தார். அவரின் உயிர்த் தியாகத்தை மதித்து, இந்திய அரசு மிக உயர்ந்த ‘அசோக் சக்ரா’ விருதை அவருக்கு வழங்கி கவுரவித்தது.இந்நிலையில், மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் 11 ஆண்டுகளுக்கு முன்பு, கார்கரே-வால் கைது செய்யப்பட்ட சாமியாரும், தற்போது போபால் தொகுதி பாஜக வேட்பாளராக அறிவிப்பட்டு இருப்பவருமான பிரக்யா சிங் தாக்குர், 2 நாட்களுக்கு முன்பு பேட்டி ஒன்றை அளித்திருந்தார். 

அதில், “மாலேகான் வழக்கால், நான் ஏராளமான கொடுமைகளை அனுபவித்தேன்; அதற்கு என்னைக் கைது செய்த ஹேமந்த் கார்கரேதான் காரணம்; அதனால் நான் அவரைச் சபித்தேன்; அவருடைய குடும்பமே அழிந்து போக வேண்டும் என்று சபித்தேன்; என் சாபம் பலித்தது; அவருடைய கர்மவினையால் அந்த வருடமே அவர் கொல்லப்பட்டார்” என்று கூறியிருந்தார்.

இது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. நாட்டுக்காக தியாகம் செய்த ஒரு அதிகாரியை, ‘சாக வேண்டும் என்று சபித்தேன்’ என்பதா? என்று பலரும் கண்டனம் தெரிவித்தனர். 

இந்நிலையில், ஐஏஎஸ் அதிகாரிகள் சங்கமும், பிரக்யா சிங் தாக்கூரின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது. “அசோக் சக்ரா விருது பெற்ற மறைந்த ஹேமந்த் கார்கரே, பயங்கரவாதிகளுடன் போராடி மகத்தான தியாகம் செய்துள்ளார்; அவரை ஒரு வேட்பாளர் தனது அறிக்கை மூலம் அவமானம் செய்வதை நாங்கள் கண்டிக்கிறோம்; நமக்காக உயிர்நீத்த தியாகிகளுக்கு மரியாதை அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்” என்று அவர்கள் கூறியுள்ளனர்.எதிர்ப்புகள் வலுத்து வரும் நிலையில், ஹேமந்த் கார்கரே குறித்து, தான் கூறிய வார்த்தைகளைத் திரும்பப் பெறுவதாக பிரக்யா சிங் பின்வாங்கியுள்ளார்.