லக்னொ:
தெலங்கானாவைச் சேர்ந்த ஆய்வறிஞர் ஒருவர் தனது பெற்றோரிடம் பொய் கூறிவிட்டு வந்து கொரோனா தொற்றுக்கான சோதனைப் பணியில் தன்னை இணைத்துக் கொண்டுள்ளார்.
கொரோனா பரவுவதைத் தடுக்கும் பொருட்டு கடந்த மாதம் 24-ஆம் தேதி நள்ளிரவு முதல் இந்த மாதம் 14-ஆம் தேதி வரை இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு தமிழகத்தில் ஏப்.30-ஆம் தேதியுடன் நீட்டிக்கப்பட்டுள்ளது. வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
தெலுங்கானாவின் மாநிலம் கம்மம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன், இவர் உத்தரப்பிரதேச மாநிலம் லக்னௌவில் உள்ள ஜார்ஜ் மன்னர் மருத்துவக் கல்லூரியில் நுண் உயிரியல் பிரிவில் பி.ஹெச்டி பயின்று வந்தார். தனது ஆய்வை ஆறு மாதங்களுக்கு முன்பு முடித்த அவர் சொந்த ஊரில் அவரது பெற்றோர்களுடன் விவசாய வேளைகளில் ஈடுபட்டு வந்துள்ளார்.இந்த நிலையில் அவரது கல்லூரியின் நுண் உயிரியல் பிரிவுத் தலைவர் அமிதா ஜெயினிடமிருந்து அவருக்கு தொலைபேசி அழைப்பு வந்துள்ளது. அதில் கொரோனா நோய்த்தொற்று தொடர்பாக அதிகமான மாதிரிகள் சோதனைக்கு வருகின்றன. அவற்றை சோதனை செய்யும் பணியில் (உங்களது) ராமகிருஷ்ணனது உதவி தேவை என்று கூறியுள்ளார். அவரது வேண்டுகோளை ஏற்று தனது பெற்றோரிடம் பொய் கூறி விட்டு, மார்ச் மாதம் 22-ஆம் தேதி ஹைதராபாத் வந்து, காவல்துறை உதவியுடன் லக்னொ வந்து சேர்ந்தார். தற்போது நோய்த்தொற்று சோதனைப் பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்.
இந்தத் தகவலைக் கேள்விப்பட்ட காங்கிரஸ் பொதுச் செயலாளர்களில் ஒருவரான பிரியங்கா காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் ராமகிருஷ்ணனுக்கு பாராட்டுத் தெரிவித்துள்ளார். கே.ஜி.எம்.யு- (ஜார்ஜ் மன்னர் மருத்துவக் கல்லூரி) வைராலஜி ஆய்வகம் பிப்ரவரி முதல் ஜெயின் தலைமையில் கோவிட்-19 க்கான சந்தேகத்திற்கிடமான மாதிரிகளை பரிசோதித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.