இடுக்கி:
நிலச்சரிவால் மலைப்பகுதியில் இருந்து குதித்துப்பாய்ந்த மழைவெள்ளத்திலும் மண்ணுக்கு அடியிலும் சிக்கிய மூணாறு ராஜமலை பெட்டிமுடியிலிருந்து 23 சடலங்கள் மீட்கப்பட்டன. 15 பேர் மீட்கப்பட்டனர். காணாமல்போன 47 பேரை தீவிரமாக தேடும் பணியில்மீட்புக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.
இடுக்கி மாவட்டம் மூணாறு ராஜமலையில் உள்ளது கண்ணன்தேவன் நிறுவனத்துக்கு சொந்தமான பெட்டிமுடி தேயிலைத் தோட்டம். இங்கு பணியாற்றும் தொழிலாளர்களில் பெரும்பாலானோர் தமிழர்களாவர். மூணாறில் இருந்து 25 கிமீ தூரத்தில் உள்ள இந்தபகுதியில் தொழிலாளர்களுக்கான வீடுகள்ஒரே இடத்தில் வரிசையாக அமைக்கப்பட்டிருந்தன. வியாழனன்று இரவு அப்பகுதியில் கனமழை பெய்தது. அப்போது சுமார் 11 மணி அளவில் நிலச்சரிவு ஏற்பட்டு கண்ணிமைக்கும் நேரத்தில் பலவீடுகள் மண்ணுக்கு அடியிலும், வெள்ளத்திலும் சிக்கின. இதில் 4 வரிசைகளாக அமைக்கப்பட்டிருந்த 30 வீடுகள் நிலச்சரிவில் சிக்கியதாகதேயிலைத் தொட்ட அதிகாரிகள் தெரிவித்தனர். அவற்றில் 83 தொழிலாளர்கள் தங்கியிருந்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர். இதில்பெரும்பகுதியினர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களாவர்.விபத்து நடந்த பகுதி தகவல் தொடர்புகள் துண்டிக்கப்பட்ட நிலையில் வெள்ளியன்று காலையில் தான் இத்தகவல் வெளி உலகுக்கு தெரியவந்தது. மீட்புக் குழுவினர் உடனடியாக அப்பகுதிக்கு செல்ல முடியாத அளவுக்கு வழிகளை மண்ணும் மரங்களும் மூடியிருந்தன. பெரியவரை தற்காலிக பாலம் கணியாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதும் மீட்பு பணிகளுக்கு தடையாக அமைந்தது. கட்டப்பட்டு வரும் புதிய பாலத்தின் ஒரு பகுதி வழியாக நடந்து அக்கரைசென்று, அங்கிருந்து வேறு வாகனத்தில் மீட்புக்குழுவினர் சம்பவ இடம் சென்றடைந்தனர். முன்னதாக, பெட்டிமுடி பகுதியில் நிலச்சரிவிலிருந்து தப்பிய தொழிலாளர்கள் கடும் சிரமத்துக்கு இடையே, தடை ஏற்பட்டிருந்த பாதையை வாகனங்கள் செல்லுமளவுக்கு சீரமைத்தனர்.
தோட்டம் தொழிலாளர்களான ராணி, கணேசன், ரபேல், அச்சுதன், பிரபு, சரோஜா,குட்டி ராஜா, செல்லதுரை, பன்னீர், மயல்சாமி,ராஜா, சண்முகய்யா, அனந்தசிவன், அண்ணாதுரை, ராஜய்யா, முருகன், கண்ணன், மற்றொரு முருகன் ஆகியோர் குடும்பத்துடன் இங்கு வசித்து வந்தனர். பள்ளிகள் திறக்கப்படாத நிலையில் தமிழ்நாட்டில் படித்துவரும் குழந்தைகள் இங்கு பெற்றோர்களுடன்தங்கியிருந்ததாகவும் கூறப்படுகிறது. மண்ணிலும் வெள்ளத்திலும் லேபர் கிளப்பும், உணவகமும் அடித்துச் செல்லப்பட்டன. நிலச்சரிவுஏற்பட்ட பகுதி அருகே பெட்டிமுடி ஆறுபாய்கிறது. நிலச்சரிவில் சிக்கியவர்கள் ஆற்றில்அடித்துச் செல்லவும் வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த பகுதியில் இதுவரை நிலச்சரிவு ஏற்பட்டதில்லை எனவும் அவர்கள் குறிப்பிட்டனர்.
மின்துறை அமைச்சர் எம்.எம்.மணி, எஸ்.ராஜேந்திரன் எம்எல்ஏ, தேவிகுளம் சார்-ஆட்சியர் எஸ்.பிரேம்கிருஷ்ணன் உள்ளிட்டோர் சனியன்று சம்பவ இடத்தை பார்வையிட்டனர். அதே பகுதிக்கு நேரில் சென்ற மருத்துவர்கள் சடலங்களை உடற்கூறாய்வு செய்தனர். அதன்பிறகு அங்கேயை இறுதி நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
ரூ.5 லட்சம் நிவாரணம்
இடுக்கி ராஜமலை நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.5லட்சம் நிவாரணமாக வழங்கப்படும் என கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார். காயமடைந்தோருக்கு சிகிச்சைக்கான முழு செலவையும் அரசே ஏற்கும். பேரிடர் கால முன்னெச்சரிக்கையாக தேசிய பேரிடர் மீட்பு படையின் (என்டிஆர்எப்) ஒரு பிரிவு இடுக்கியில் நிறுத்தப்பட்டிருந்தது.ஆனால், வாகமண்ணில் வெள்ளியன்று ஒரு கார் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதைத் தொடர்ந்து என்டிஆர்எப் குழு அந்தமீட்பு பணியில் ஈடுபட்டிருந்தது. சனியன்று காலை அவர்கள் ராஜமலை மீட்புக்கு ஈடுபடுத்தப்பட்டனர். இது தவிர தீயணைப்பு மீட்புபடையின் பயிற்சி பெற்ற குழுவும் அங்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக முதல்வர் கூறினார்.
இந்நிலையில் சனியன்று மதியம் அமைச்சர் எம்.எம்.மணி செய்தியாளர்களிடம் கூறுகையில், உயிரிழந்தோரின் குடும்பங்களுக்குஅரசு அறிவித்துள்ள நிவாரணம் அல்லாதுஅவர்களுக்கு தேவையான உதவிகள் வழங்கப்படும். நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் முயற்சி முழு வேகத்தில் நடந்து வருகிறது. தேடப்படும் 53 பேரை உயிருடன் மீட்கும்வாய்ப்பு மிகவும் குறைவு எனவும் அவர் தெரிவித்தார்.
மண்ணில் புதையுண்டு மீட்கப்பட்ட சடலங்கள் ராஜமலையில் உள்ள தனியார் தோட்ட நிர்வாகத்தால் நடத்தப்படும் மருத்துவமனையில் உடற்கூறாய்வு செய்யப்பட்டன. ஒரு குடும்பத்தினருக்கு ஒரு குழி என்கிற வகையில் கண்ணன் தேவன் தேயிலைத் தோட்டத்தில் உள்ள மயானத்தில் இறுதி நிகழ்ச்சிகளை நடத்த மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
கயத்தாறில் உள்ள உறவினர்கள் கண்ணீர் மல்க கோரிக்கை
இதற்கிடையே, அங்கு வசித்தவர்களில் பெரும்பாலான தொழிலாளர்கள், தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு பாரதி நகரைச் சேர்ந்தவர்கள் என்று தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்து அவர்களின் உறவினர்கள் கதறி அழுதனர். பின்னர் பாரதிநகர் பகுதி மக்கள், கயத்தாறு தாலுகா அலுவலகத்துக்கு சென்று, தாசில்தார் பாஸ்கரனிடம் கோரிக்கை மனு வழங்கினர். அதில், கேரள மாநிலத்தில் நடந்த நிலச்சரிவில் சிக்கியுள்ள, கயத்தாறு பாரதி நகரைச் சேர்ந்த 71 பேரில்உயிரிழந்து இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. எனவே, அவர்களுடைய உறவினர்கள்,கேரள மாநிலத்துக்கு செல்வதற்கு இ-பாஸ் வழங்க வேண்டும். நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களை மீட்பதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்து இருந்தனர்.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பலரும் உயிரிழப்பு
இதுகுறித்து பாரதி நகர் பகுதி மக்கள் கூறுகையில், எங்களுடைய உறவினர்கள் பலரும் கேரளாவில் உள்ள தனியார் தேயிலைஎஸ்டேட்டில் குடும்பத்துடன் தங்கியிருந்து பல ஆண்டுகளாக வேலை செய்து வந்தனர். அந்த நிறுவனத்தில் மேற்பார்வையாளராக பாரதி நகரைச் சேர்ந்த மேகநாதன் பணியாற்றினார். மேலும் அப்பகுதியில் வார்டு உறுப்பினராக ஜெயராமன் உள்ளார். நிலச்சரிவில் சிக்கி, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பலரும்உயிரிழந்துள்ளனர். இந்த துயர சம்பவம் பற்றி அறிந்ததும், மேகநாதன், ஜெயராமன் ஆகியோரிடம் செல்போனில் தொடர்பு கொண்டு விவரங்களை கேட்டு அறிந்தோம். நிலச்சரிவில் சிக்கி பாதிக்கப்பட்ட உறவினர்களை மீட்பதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர். இதே போன்று கயத்தாறு அருகே தலையால் நடந்தான்குளம், தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பகுதியைச் சேர்ந்த தொழிலாளர்களும், கேரளாவில் நிகழ்ந்த நிலச்சரிவில் சிக்கியதாக உறவினர்கள் கதறி அழுதனர். இந்த சம்பவம் தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.