,ஜூன் 25- மழை அளவு, நீர் வரத்தை பொறுத்து காவிரியில் தமிழகத்திற்கு ஜூன் மற்றும் ஜூலை மாதத்திற்குரிய 40.43 டிஎம்சி தண்ணீரை திறக்க வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. காவிரி மேலாண்மை ஆணையத்தின் நான்காவது கூட்டம், அதன் தலைவர் மசூத் ஹூசேன் தலைமையில் தில்லியில் நடைபெற்றது. இதில், குறுவை சாகுபடிக்கு மேட்டூரில் நீர் திறப்பதை டெல்டா விவசாயிகள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருப்பதையும் கர்நாடகா தமிழ்நாட்டுக்கு உரிய பங்கு தண்ணீரை விடுவிக்காததால், இந்த ஆண்டும் ஜூன் 12 ஆம் தேதியன்று காவிரி டெல்டா பாசனத்திற்கு மேட்டூர் அணையிலிருந்து நீர் திறந்துவிட முடியவில்லை என்றும் ஜூன் மாதத்திற்கு நிர்ணயிக்கப்பட்ட அளவான 9.19 டிஎம்சி நீரை தமிழ்நாட்டிற்கு விடுவிக்க வேண்டும் என கடந்த கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதை சுட்டிக்காட்டிய தமிழக அரசு, ஆணையத்தின் முடிவை கர்நாடகா செயல்படுத்தவில்லை என்று முறையிட்டது. 9.19 டிஎம்சி நீரினை இம்மாத இறுதிக்குள் விடுவிக்குமாறு கர்நாடகத்திற்கு உத்தரவிட வேண்டும், ஜூலை மாதத்திற்குரிய 31.24 டிஎம்சி நீரையும், வரும் மாதங்களுக்கான நீரையும் திறக்க கர்நாடகத்திற்கு உத்தரவிட வேண்டும் என்றும் தமிழகத்தின் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு மற்றும் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு விரோதமான மேகதாது அணை திட்டம் குறித்து இனிவரும் கூட்டங்களிலும் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளக்கூடாது. காவிரியில் நீர் திறப்பதை கண்காணிக்க மத்திய நீர்வளக் குழுமத்திலிருந்து தகுதி வாய்ந்த பொறியாளர்களை நியமிக்க வேண்டும். காவிரி நீர் முறைப்படுத்தும் குழுவின் தலைமையிடம் பெங்களூரு என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதால் இனி வரும் காலத்தில் அதன் கூட்டங்கள் பெங்களூரில் மட்டுமே நடத்தப்பட வேண்டும் என்றும் தமிழக அரசு காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் வலியுறுத்தியது. அணைகளில் போதிய தண்ணீர் இல்லை என்று கைவிரித்த கர்நாடகம், தென்மேற்கு பருவமழை பொழிந்து காவிரியில் நீர்வரத்து அதிகரித்தால் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடத் தயார் என்று கூறியது. கூட்டத்தின் முடிவில், மழை அளவு, நீர்வரத்தை பொறுத்து, ஜூன் மற்றும் ஜூலை மாதத்திற்குரிய 40.43 டிஎம்சி தண்ணீரை தமிழகத்திற்கு காவிரியில் திறக்குமாறு கர்நாடக அரசுக்கு ஆணையம் உத்தரவிட்டது. இக்கூட்டத்திற்குப் பின்னர் காவிரி மேலாண்மை ஆணைய தலைவர் மசூத் ஹூசைன் செய்தியாளர்களிடம் கூறுகையில், பருவமழை போதிய அளவில் பெய்யவில்லை என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. காவிரியில் நீர்வரத்து தொடர்பான விவரங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. கர்நாடகத்திற்கு 4 அணைகளிலும் நேற்றைய நிலவரப்படி 1.77 டிஎம்சி நீர் மட்டுமே வந்துள்ளது. தமிழகம் ஜூன் 23ஆம் தேதி நிலவரப்படி 1.8 டிஎம்சி நீரை பெற்றுள்ளது. ஜூன் மற்றும் ஜூலை மாதத்திற்குரிய நீரை திறக்க கர்நாடகத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றார். ஜூன் மாதத்திற்குரிய 9.19 டிஎம்சி தண்ணீரையே கர்நாடகம் திறக்காத நிலையில், 40.43 டிஎம்சி தண்ணீரை எப்படி திறக்கும் என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, ஆணையம் உத்தரவிட்டாலும் நீர்வரத்தை பொறுத்துத்தானே தண்ணீர் திறக்க முடியும். நல்ல மழைப் பொழிவைப் பெற்று, காவிரியில் நீர்வரத்து அதிகரிக்கும் என நம்புவோம் என்று மசூத் ஹூசைன் தெரிவித்தார்.