தில்லி
இந்தியாவில் 325 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு இல்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.கொரோனா பாதிப்பு மற்றும் பரவல் குறித்து மத்திய சுகாதாரத்துறை இணை செயலர் லாவ் அகர்வால் தில்லியில் வியாழனன்று செய்தியாளர்களைச் சந்தித்த பொழுது கூறியதாவது," இந்தியாவில் 325 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு இல்லை. குறிப்பாக 14 மாவட்டங்களில் 2 வார காலத்திற்கு புதிதாக யாருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்படவில்லை. புதுச்சேரி மாநிலம் மாஹேயில் கடந்த 28 நாட்களாக கொரோனா தொற்று ஏற்பட்டதாக தகவல் இல்லை. எனினும் கடந்த 24 மணிநேரத்தில் 941 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதில் 37 பேர் உயிரிழந்துள்ள நிலையில், இந்தியாவில் கொரோனா இறப்பு விகிதம் 3.3 சதவீதமாக இருப்பதாகவும், உலகளவில் ஒப்பிடுகையில் இந்தியாவில் சராசரி மீட்பு விகிதம் 24.86 சதவீதமாகவும், கொரோனா தொற்றால் இறப்பு விகிதம் 6.47 சதவீதமாகவும் உள்ளது" எனக் கூறினார்.