புதுதில்லி:
ஊடகங்கள் சுட்டிக்காட்டியதைத் தொடர்ந்து, நிதிநிலை அறிக்கையில் இருந்த 14 தவறுகளை மோடி அரசு ரகசியமாக திருத்தியுள்ளது.மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 2020-21ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டை கடந்த பிப்ரவரி 1-ஆம் தேதி தாக்கல் செய்தார். அப்போது, “சரியான விவரங்களே வலுவான நம்பிக்கையை அளிக்கும்” என அவர் குறிப்பிட்டிருந்தார். ‘தவறான புள்ளிவிவரங்களை அளிப்பதனால் சொல்லப்படும் அனைத்து விஷயங்களுமே நம்பகத்தன்மை இல்லாததாக போய்விடும்’ என்ற அடிப்படையில் இதனை அவர் தெரிவித்திருந்தார்.
ஆனால், நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையில் 14 தவறான விவரங்கள் இடம்பெற்றிருப்பதை ‘இந்தியா டுடே’ செய்தி நிறுவனம் கண்டுபிடித்துக் கூறியிருந்தது. மத்திய நிதியமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டிருந்த நிதிநிலை அறிக்கையில் இருந்து இவற்றை எடுத்திருந்த ‘இந்தியா டுடே’, அந்த தவறுகளை மத்திய நிதியமைச்சகத்திற்கு இ-மெயிலும் அனுப்பியுள்ளது.பட்ஜெட் அறிக்கையானது, பிடிஎப் மற்றும் எக்செல் ஆகிய வடிவங்களில் வெளியிடப்பட்டு உள்ளன. இதில் இரு வடிவங்களுக்கும் இடையில் பல தவறுகள் உள்ளன. உதாரணமாக தில்லி சப்தர்ஜங் மருத்துவமனைக்கு பிடிஎப் வடிவத்தில், ரூ. ஆயிரத்து 318 கோடியே 86 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதுவே எக்செல் வடிவத்தில் ரூ. ஆயிரத்து 166 கோடியே 86 லட்சம் என்று இருந்துள்ளது. இந்த இரண்டுக்குமான வித்தியாசம் மட்டும் ரூ. 152 கோடியாகும்.இதேபோல தில்லி ஆர்எம்எல் மருத்துவமனைக்கு ஒதுக்கப்பட்ட தொகையில் ரூ. 132 கோடி, எய்ம்ஸ் மருத்துவமனைக்கான தொகையில் ரூ. 290 கோடி, சண்டிகர் மருத்துவமனைக்கு ரூ. 125 கோடி என வித்தியாசங்கள் காணப்பட்டுள்ளன. மொத்தம் 14 தவறுகள் இதேபோல இருந்துள்ளன.
தாங்கள் சுட்டிக்காட்டியிருக்கும் இந்த தவறான புள்ளிவிவரங்களுக்கு நிதியமைச்சகம் விளக்கம் அளிக்க வேண்டும் என்று பிப்ரவரி 4-ஆம் தேதி காலை 11.12 மணிக்கு ‘இந்தியா டுடே’ வலியுறுத்தியிருந்த நிலையில், அதற்கு நிதியமைச்சகம் பதில் எதுவும் அளிக்காமலேயே இருந்துள்ளது. ஒருகட்டத்தில், நிதியமைச்சகத்தின் இந்த அலட்சியம் குறித்து, ‘இந்தியா டுடே’ மீண்டும் சுட்டிக்காட்டிய பின்னரே, 134 தவறுகளும் திருத்தப்பட்டு விட்டதாக பதிலளித்துள்ளது. தற்போது பிடிஎப் வடிவத்தில் கொடுக்கப்பட்ட அதேதொகை எக்செல் வடிவத்திலும் மாற்றப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளது. ஆனால், பிப்ரவரி 4-ஆம் தேதி இரவு வரை இந்த திருத்தம் நடைபெறவில்லை. புதன்கிழமை அதிகாலையில்தான் அது மாற்றப்பட்டுள்ளது.பொதுவாக இவ்வாறு திருத்தங்கள் செய்யும்போது, அதுகுறித்த தகவலை அளிப்பது வழக்கம் என்று கூறப்படுகிறது. ஆனால், நிதியமைச்சகமோ எவ்வித விளக்கமும் இன்றி, மிக ரகசியமாக இந்த திருத்தங்களைச் செய்துள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.