நாமக்கல், மார்ச் 30-
திருச்செங்கோடு அருகே ஓபிஎஸ் கூட்டத்திற்கு ஆள்சேர்ப்பதற்காக அதிமுகவினர் அழைத்துவந்த வாகனம் விபத்திற்குள்ளானதில் 35 பெண்கள் படுகாயமடைந்தனர். இதன்பின் காயமடைந்தவர்களின் சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யாமல் அதிமுகவினர் கைவிரித்ததால் ஆறுதல் கூறவந்த எம்எல்ஏ-வுடன் பாதிக்கப்பட்ட பெண்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. நாமக்கல் நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் பி.எல்.காளியப்பனுக்கு வாக்கு சேகரிக்க வெள்ளியன்று தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் திருச்செங்கோட்டுக்கு வருகை புரிந்தார். இதையொட்டி மல்லசமுத்திரம் அருகே உள்ள சூரியகவுண்டம்பாளையம் அருந்ததியர் தெருவில் வசிக்கும் 35க்கும்மேற்பட்ட பெண்கள் சரக்கு ஆட்டோவில் முன்னாள் மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் ராணி தலைமையில் அழைத்து வரப்பட்டனர். இதன்பின் கூட்டம் முடிந்து திரும்பி செல்லுகையில் அதிக எண்ணிக்கையிலானோர் ஒரே வாகனத்தில் இருந்ததால் சேலம் செல்லும் சாலையில் வாகனம் நிலைதடுமாறி கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.
இந்த விபத்தில் 35 பேருக்குகை, கால்களில் எலும்பு முறிவுகள்உள்ளிட்ட காயங்கள் ஏற்பட்டது. இதற்கிடையே, துணை முதல்வர்வருகையால் திருச்செங்கோடு சாலை முழுவதும் பல மணி நேரம் வாகன நெரிசல் ஏற்பட்டது. இதனால் விபத்து நடந்த பகுதிக்கு108 ஆம்புலன்ஸ் கூட வரமுடியாதநிலை ஏற்பட்டது. இதையடுத்துகாயமடைந்த அனைவரும் ஆட்டோக்கள் மூலம் திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். பின்னர் ஏதேனும் வழக்குகள் வந்துவிடக் கூடாது என்ற காரணத்தினால் அவர்கள் அனைவரும் திருச்செங்கோடு அருகே உள்ள தனியார்மருத்துவமனையில் வெள்ளியன்று இரவோடு இரவாக உள்நோயாளியாக சேர்க்கப்பட்டனர்.இதன் பின்னர் சனியன்று மருத்துவமனைக்கு வந்த ஆளும்கட்சியின் நிர்வாகிகள் காயமடைந்தவர்களுக்கு தலா பத்தாயிரம் ரூபாய் வீதம் வழங்கிவிட்டு, அனைவரும் வீட்டுக்குச் செல்லுங்கள், மருத்துவமனையில் இருக்க வேண்டாமென கூறியுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த பெண்கள், வீட்டுக்கு செல்ல மறுத்துவிட்டனர். மேலும், எங்களுக்கு எவ்வித சிகிச்சையும் அளிக்கப்படாத நிலையில், காயங்களுடன் எப்படி செல்வது. எங்களுக்கு உரிய சிகிச்சை அளித்தால் மட்டுமே, நாங்கள் வீட்டுக்கு திரும்புவோம் என கூறியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அதிமுக திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் பொன்சரஸ்வதி நேரில் வந்து ஆறுதல் கூறினார். அப்போது, உரிய சிகிச்சை அளிக்காமல் எங்களை வீட்டுக்குச் செல்லுங்கள் என்று கூறுவது எப்படி சரியாக இருக்கும். மேலும் உயர் சிகிச்சைகளுக்கு உரிய பணத்தை கட்டினால் மட்டுமே சிகிச்சை வழங்குவதாக மருத்துவமனை நிர்வாகத்தினர் கூறி வருகின்றனர். எங்களிடம் எவ்வித பொருளாதார வசதியும் இல்லாத நிலையில், நாங்கள் பரிதவித்து வருகிறோம் என பாதிக்கப்பட்ட பெண்கள் சரமாரியாக கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளிக்க முடியாமல் திணறிய பொன்சரஸ்வதி, அங்கிருந்து உடனடியாக கிளம்பிச் சென்றார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.