நாமக்கல், மே 25-ஓய்வுபெறும் நாளிலேயே பணப்பயன்கள் அனைத்தும் வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பு வலியுறுத்தியுள்ளது. தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் நாமக்கல் கிளை பேரவை கூட்டம் சிஐடியு மாவட்டகுழு அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு கிளைத் தலைவர் எம். பொன்னுசாமி தலைமை வைத்தார். மாவட்ட செயலாளர் எஸ்.அன்பழகன் துவக்கி வைத்து பேசினார். கிளைசெயலாளர் ஏ.கே.சந்திரசேகரன், கிளை பொருளாளர் கே.செல்வராஜ் ஆகியோர் அறிக்கையை முன்மொழிந்து பேசினர். மாநில உதவிச் செயலாளர் கே.கந்தசாமி சிறப்புரையாற்றினார். மாநிலகுழுஉறுப்பினர் என். கிருஷ்ணன்,மாவட்ட தலைவர் பி.என். பழனிவேல், மாவட்ட பொருளாளர் பி.அழகேசன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். இப்பேரவையில் நூற்றுக்கும் மேற்பட்ட ஓய்வுபெற்ற தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.
தீர்மானங்கள்
இப்பேரவையில், மாதம் முதல்தேதி அன்றே ஓய்வூதியம் வழங்க வேண்டும். பஞ்சப்படியும், நிலவை தொகையும் உடனே வழங்க வேண்டும். ஓய்வுபெறும் நாளிலேயே பணப்பயன்கள் அனைத்தும் வழங்க வேண்டும். ஓய்வு பெற்ற தொழிலாளிக்கு மருத்துவ காப்பீடு திட்டம் அமலாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.இதைத்தொடர்ந்து புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதில் கிளை தலைவராக எம்.பொன்னுசாமி, செயலாளராக ஏ.கே.சந்திரசேகரன், பொருளாளர் கே.செல்வராஜ் மற்றும்துணை தலைவர்கள், துணைச் செயலாளர்கள் உள்ளிட்ட 13பேர் கொண்ட கமிட்டி தேர்வுசெய்யப்பட்டது. முடிவில், மாநில துணை பொதுச் செயலாளர் பி.செல்வராஜன் நிறைவுரை ஆற்றினார்.