tamilnadu

அரசு ரப்பர் கழக நிலத்தை பயனற்றதாக அறிவிப்பதா? தமிழக முதல்வர் தலையிட சிபிஎம் வலியுறுத்தல்

நாகர்கோவில்:
1243 ஹெக்டேரில் தான் பால்வடிப்பு பணி மேற்கொள்ளப்படுவதாக கூறி அரசு ரப்பர் கழக சொத்தினை உபயோகமற்ற பூமியாக அறிவிப்பதா? என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகேள்வி எழுப்பியுள்ளது. வேலைவாய்ப்பை பாதுகாத்திட தமிழகமுதல்வர் தலையிடவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து கட்சியின் மாவட்டச் செயற்குழு கூட்டத்தில் தீர்மானத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதையொட்டி மாவட்ட செயலாளர் ஆர்.செல்லசுவாமி தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:  கன்னியாகுமரி மாவட்டம்குறிப்பிடத்தகுந்த தொழிற்சாலைகள் இல்லாத மாவட்டமாகும். இம்மாவட்டத்தில் மலையோர பகுதிகளில் தனியார் துறைக்கு சொந்தமாக சிறியதும், பெரியதுமான ரப்பர் தோட்டங்கள் சிறிய அளவில் மலையோர பகுதி மக்களுக்கு வேலை வழங்கி வந்தது. இந்த சூழ்நிலையில் தான் குமரி மாவட்டத்தில் அரசு துறையில் ரப்பர் தோட்டங்கள் உருவாக்கப்பட்டு வேலைவாய்ப்பினை பெருக்கிட வேண்டும் என்ற கோரிக்கையினை அரசியல் கட்சிகள் மற்றும் தொழிற் சங்கங்கள் உட்பட்ட பல்வேறு தரப்பினர்முன்வைத்து தமிழக அரசை வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களும் நடைபெற்றது.இதனையடுத்து சுமார் 5000 ஹெக்டேர் பரப்பளவில் அரசு ரப்பர்தோட்டம் உருவாக்கப்பட்டு ரப்பர் உற்பத்தியும் அதை சார்ந்த பணிகளும் துவங்கப்பட்டதுடன் கீரிப்பாறை, பெருஞ்சாணி, மைலார் என மூன்று இடங்களில் ரப்பர் தொழிற்சாலைகளும் துவங்கப்பட்டு செயல்பட்டு வந்தது. இதன் மூலம் துவக்கத்தில் சுமார் 5000 பேர் வரையிலும் வேலை வாய்ப்பினை பெற்று அவர்களின் குடும்பங்கள் பிழைத்து வந்தனர். 

பின்னர் அரசு தோட்டம் என்பது 1984 அக்டோபர் 1 ஆம் தேதி முதல் மாநில அரசின் கட்டுப்பாட்டில் செயல்படும் அரசு ரப்பர் கழகமாக மாற்றப்பட்டு செயல்பட்டு வருகிறது. இக்காலத்தில் உரிய காலங்களில் ரப்பர் மறுநடவு பணிகள் மேற்கொள்வது அவ்வப்போது களையெடுப்பு பணிசெய்து தொழிலாளர்கள் சிரமமின்றி பால்வடிப்பு பணிகள் மேற்கொள்ள உதவிடுதல் மற்றும்சில குறைபாடுகளை களைவதுடன் மேற்கண்ட மூன்று தொழிற்சாலைகளையும் விரிவுபடுத்திட செய்து வேலை வாய்ப்புகளை பெருக்கிடவேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் சிஐடியு போன்ற எங்களது அமைப்புகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றோம்.ஆனால் இவைகளுக்கு மாறாக தவறான- ஒருதலைபட்சமான கார
ணங்களை கூறி அரசு ரப்பர் கழகத்தின் நிலபரப்பின் கணிசமான பகுதியினை ரப்பர் பயிரிடவில்லை என கூறி வனத்துறைக்கு ஒப்படைக்க துவங்கியுள்ளது. 

அவ்வாறான முயற்சியினை கைவிட்டு ரப்பர் கழகத்தின் முழுநிலப் பரப்பிலும் ரப்பர் நடவு மேற்கொண்டு ஆரம்பகால எண்ணிக்கையிலான வேலை வாய்ப்பு எண்ணிக்கையினை மீண்டும் உருவாக்கிட வேண்டும் என கேட்டு 2020 ஆகஸ்ட் 13 ஆம் தேதி நாகர்கோவிலில் அரசு ரப்பர் கழக நிர்வாக இயக்குநர் அலுவலகம் முன்எங்கள் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம்நடத்தி கோரிக்கை மனுவும் அளிக்கப்பட்டது. எங்களது மனுவானது தமிழகஅரசுக்கு அனுப்பப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் அதிகாரிகள் தரப்பில் அப்போது தெரிவிக்கப்பட்டது.

ஆனால் அதன் பின்னர் எங்களது தொழிற்சங்க அமைப்பிற்கு நிர்வாக இயக்குநர் ஆகஸ்ட் 25 ஆம் தேதி அனுப்பிய கடிதமானது மிகவும் அதிர்ச்சியளிப்பதாக அமைந்துள்ளது. அக்கடிதத்தில் அரசு ரப்பர் கழக நிலப்பரப்பு 4785.70 ஹெக்டேர் என்றும்இதில் வனத்துறைக்கு ஒப்படைத்தது நீங்கலாக 3994.495 ஹெக்டேரில் மட்டுமே ரப்பர் கழகம் செயல்பட்டாலும் 1243 ஹெக்டேரில் தான் பால்வடிப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது என குறிப்பிட்டுள்ளதுடன் ஜனவரி  24 ஆம்தேதியன்று நடைபெற்ற ரப்பர்கழக நிர்வாகக்குழு கூட்டத்தில் மேலும் 417.781 ஹெக்டேரினை மீண்டும் வனத்துறைக்கு ஒப்படைக்க விருப்பதாகவும் அத்துடன் அரசு கடிதம் மூலம் மேலும் அரசு ரப்பர் கழக சொத்தினை படிப்படியாக உபயோகமற்ற பூமி என அடையாளப்படுத்தப்பட்டு வனத்துறைக்கு ஒப்படைக்கும் நடவடிக்கை தொடரும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இக்கடிதத்தின் உள்ளடக்கத்தினை பார்க்கையில் அரசு ரப்பர் கழக அதிகாரிகள் கடந்த சில ஆண்டுகளாகவே வேண்டுமென்றே ரப்பர் கழகத்தின் கணிசமான நிலப்பரப்பில் ரப்பர் நடவு மற்றும் மறுநடவு செய்யாமல் உபயோகமற்ற பூமி என ஒதுக்கி அதன்படி தவறான தகவல்களை அரசுக்கு கொடுத்து ரப்பர் கழக சொத்தினை வனத்துறைக்கு படிப்படியாக ஒப்படைத்து வந்துள்ளதை அறிய முடியும். இதன் காரணமாக அரை நூற்றாண்டுகளுக்கு முன்னர் துவக்க காலத்தில் சுமார் 5000 பேர் வரையிலான வேலை செய்த தொழிலாளர்களின் எண்ணிக்கைக்கையானது இப்போது 2000 க்கும் கீழே சென்றுள்ளது. இதன் மூலம் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் வேலை வாய்ப்பு பறிபோயுள்ளது. 

அரசு ரப்பர் கழகத்தின் தற்போதைய கடிதத்தினை பார்க்கையில் மாநில அரசின் பொதுத்துறையான இந்நிறுவனமானது வெகுவிரையில் மூடப்படும் நிலை ஏற்படும் என கவலை கொள்கிறோம்.மேலும் குறிப்பிடத்தகுந்த தொழில்வாய்ப்புகள் இல்லாத இம்மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் தோட்டங்களின் மூலம் கிடைக்கும் தரமான ரப்பரைபயன்படுத்தி கனரக ரப்பர் தொழிற்சாலை மற்றும் சிறு தொழில்களையும் துவங்கிட வேண்டும் என பல ஆண்டுகளாக மக்கள் போராடி வரும் நிலையில் அரசு ரப்பர் கழகத்தின் ரப்பர் உற்பத்தியினை நான்கில் ஒரு பங்காக குறைத்தும் படிப்படியான மீதமுள்ள உற்பத்தியினை முடக்குவதையும் போன்ற செயல்களானது குமரி மாவட்டத்தில் இருந்த வேலை வாய்ப்பும் பறிக்கப்பட்டு புதிய வேலை வாய்ப்புகளையும் அறிகுறியினையும் முடக்குவதாகவே தோன்றுகிறது.அரசின் இத்தகைய அணுகுமுறையானது மிகுந்த அதிர்ச்சியளிக்கின்றது. 

எனவே, குமரி மாவட்டத்தில் அரசு துறையில் ஐம்பதாண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வரும் ரப்பர்தோட்டமானது துவக்க காலத்தில் இருந்த மொத்த பரப்பளவிலும் மீண்டும் ரப்பர் நடவு மேற்கொள்ளப்பட்டு இழந்த வேலை வாய்ப்பினை மீண்டும் உருவாக்கிட தமிழக முதல்வர் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.

மாவட்ட செயற்குழு
மார்க்சிஸ்ட் கட்சியின் கன்னியாகுமரி மாவட்டச் செயற்குழு கூட்டம் நாகர்கோவிலில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.தங்கமோகன் தலைமையில் நடைபெற்றது. கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினர் எஸ்.நூர்முகமது, மாவட்டச் செயலாளர் ஆர்.செல்லசுவாமி, மாவட்ட செயஙறகுழு உறுப்பினர்கள் என்.முருகேசன், எம்.அண்ணாதுரை, ஆர்.லீமாறோஸ், என்.உஷாபாசி, கே.மாதவன், எ.வி.பெல்லார்மின், பி.விஜயமோகன் கலந்து கொண்டனர்.