நாகர்கோவில்:
கன்னியாகுமரி-திருவனந்தபுரம் ரயில் பாதையில், குழித்துறை அருகே ஆற்றுப்பாலம் உள்ளது. இதில், கடந்த சில நாள்களாக பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. வழக்கம் போல், புதனன்றும் பராமரிப்பு பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். அப்போது சென்னையில் இருந்து அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டு வந்தது. தண்டவாளத்தில் ரயில் வருவதை கவனிக்காமல் பராமரிப்பு பணியில் ஈடுபட்ட ஊழியர்கள் மீது ரயில் வேகமாக மோதியது. இதில் சம்பவ இடத்தில் உடல் நசுங்கி 2 பேர் பலியாகினர்.
இந்த விபத்து குறித்து தகவலறிந்து அங்கு வந்த நாகர்கோவில் ரயில்வே காவல்துறையினர் சம்பவ இடத்தில் தண்டவாளத்தில் கிடந்த ஊழியர்கள் உடல்களை மீட்டு, ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக நடத்திய விசாரணையில், இறந்தவர்கள் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ஜெயசந்த் மீனா (30), கேரள மாநிலம்,கொல்லத்தை சேர்ந்த ரயில்வே ஊழியர் மதுசூதனன் (60) என்பது தெரியவந்தது.இந்த விபத்து காரணமாக, குழித்துறை ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்ட ஜலண்ட் எக்ஸ்பிரஸ் உள்பட, அவ்வழியாக செல்லும் ரயில்கள் சிறிது நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றன.