நாகர்கோவில்:
அரசு ரப்பர் கழக தொழிலாளர்களின் ஊதிய உயர்வு உடன்பாட்டை காலம்தாழ்த்தாமல் முடிவு செய்யவும், தொழிலாளர்களிடம் இருந்து நிர்வாகம் அநியாயமாக பிடித்தம் செய்ய உத்தேசித்த ரூ.30 லட்சத்தில் ரூ.10 லட்சம் பிடித்தம் செய்ததை உடனடியாக திருப்பி வழங்கவும், சிஎல்ஆர் தொழிலாளர்கள் சுமார் 20 ஆண்டுகளாக வேலை செய்தும் நிரந்தரம் செய்யாததை கண்டித்தும் மற்றும் கோரிக்கைகளை வலியுறுத்தியும் நாகர்கோவில் வடசேரியில் அரசு ரப்பர் கழக நிர்வாக இயக்குநர் அலுவலகம் முன்பு அனைத்து சங்க ஒருங்கிணைப்பு குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு, சிஐடியு தோட்ட தொழிலாளர் சங்க பொதுச்செயலாளர் வல்சகுமார் தலைமை வகித்தார். இதில், நிர்வாகி நடராஜன், சிஐடியு மாவட்டசெயலாளர் கே.தங்கமோகன், காங்கிரஸ் கிழக்கு மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன் உட்பட அனைத்து சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.