நாகப்பட்டினம், செப்.21- நாகை மாவட்டம், வேதாரணியம் வட்டம், தலைஞாயிறு ஒன்றியத்தைச் சேர்ந்த வெண்ணாறு வடிநிலக் கோட்டப் பகுதியின் அடப ஆற்றில் தண்ணீர் வந்ததால், துளசபுரம், சாக்கை, உம்பளச்சேரி, பிராந்தியங்கரை, சேகல் மடப்புரம், செம்பிய மணக்குடி ஆகிய பகுதிகளில் 5 ஆயிரம் ஹெக்டர் நிலப்பரப்பில் விவசாயிகள் நேரடி நெல் விதைப்புச் செய்தனர். நெல் மணிகள் முளைத்துப் பயிர்கள் வெளி வந்திருக்கும் நிலையில் செம்பிய மணக்குடி என்னும் இடத்தில் வாய்க்காலின் குறுக்கே பொதுப்பணித் துறையினர் காலம் கடந்து சிறு பாலம் கட்டி வருகின்றனர். இதனால் தண்ணீர் செல்ல மாற்றுப் பாதை இல்லாததால் நீர் வயல்களை நிறைத்துப் பயிர்களைப் பாழாக்கி விடும். இதனை விவசாயிகள் பொதுப்பணித் துறையினரிடம் எடுத்துச் சொல்லியும் ஏதும் நடப்பதாக இல்லை. இதைதொடர்ந்து விவசாயிகளும், ஊர் மக்களும் சேர்ந்து, வாய்க்காலின் தண்ணீரை வேறு திசையில் திருப்பி விடத் தாமாகவே முன்வந்து, வாய்க்காலில் இறங்கி வேலை செய்தனர்.