tamilnadu

img

மயிலாடுதுறை அரசு மருத்துவமனை பச்சிளங்குழந்தைகள் தீவிர சிகிச்சைப்பிரிவு அருகிலேயே வழிந்தோடும் சாக்கடை கழிவு நீர்

குழந்தைகளின் உயிரோடு விளையாடும் மயிலாடுதுறை அரசு மருத்துவமனை

தரங்கம்பாடி: நாகை மாவட்டம்,மயிலாடுதுறை அரசு தலைமை மருத்துவமனையில் பச்சிளங்குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவு பகுதியை சுற்றிலும் சாக்கடை கலந்த கழிவு நீர் வழிந்தோடுவதால் பிறந்த குழந்தைகள் முதல் பல்வேறு சிகிச்சை பெற்று வருகின்ற ஏராளமான குழந்தைகள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.  மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு நாள்தோறும் 1000 க்கும் மேற்பட்ட வெளிநோயாளிகளும்,300 க்கும் மேற்பட்ட உட்புறநோயாளிகளும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.கடந்த பல ஆண்டுகளுக்கும் மேலாகவும் அடிப்படை வசதிகள் எதுவுமின்றி நோயாளிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.மருத்துவமனை முழுவதும் கடுமையான சுகாதார சீர்கேடு அடைந்து 24 மணி நேரமும் துர்நாற்றம் வீசிக்கொண்டே இருக்கிறது. ஒரு நோயை சரிசெய்ய வந்தால் கூடவே சில நோய்களும் ஒட்டிக்கொள்ளும் அவலநிலையில் 24 மணி நேர மகப்பேறு அறுவை சிகிச்சை பிரிவு,பச்சிளங்குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவு கட்டிடங்கள் உள்ள பகுதியை சுற்றிலும் அருகிலுள்ள கழிவு நீர் வடிகால் தொட்டியிலிருந்து சாக்கடை கழிவு நீர் வழிந்தோடி வருகிறது.இதனால் பிறக்கும் குழந்தையிலிருந்து, சிகிச்சை பெறும் குழந்தைகள்,பிரசவித்த,அறுவை சிகிச்சை செய்துகொண்ட பெண்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.  ஏற்கனவே பல்வேறு நோய்கள் பரவுவது பற்றிய அச்சத்தில் இருக்கும் சூழலில் மருத்துவமனை நிர்வாகத்தின் அலட்சியத்தால் தொற்றுநோய்கள் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சிகிச்சை பெற்று வருகின்ற சிலர் குற்றஞ்சாட்டி வருகின்றனர். தேங்கி நிற்கும் கழிவுநீரை உடனடியாக அகற்றுவதோடு,பாதுகாப்பான சூழலை ஏற்படுத்தித்தர சுகாதாரத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளனர்.