சீர்காழி,மார்ச் 19- பருத்தி பயிரை காப்பீடு செய்து கொள்ளுமாறு கொள்ளிடம் வட்டார வேளாண் உதவி இயக்குநர் விவசாயிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இதுகுறித்து நாகை மாவட்டம் கொள்ளிடம் வட்டார வேளாண் உதவி இயக்குநர் சுப்பையன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதா வது: தற்பொழுது கொள்ளிடம் பகுதியில் விவசாயிகள் பரவலாக பருத்தி பயிரிடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். நாகப்பட்டினம் மாவட்டத்தில் இத்திட்டத்தின் காப்பீட்டு நிறுவனமான அக்ரிகல்சுரல் இன்சூரன்ஸ் கம்பெனி ஆப் இந்தியா லிமிடெட் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் கடன் பெறும் விவசாயிகள், அவர்கள் கடன் பெறும் வங்கிகளில் அங்கீகரிக்கப்பட்ட பொது சேவை மையங்கள், வணிக வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலமாக விருப்பத்தின் பேரில் பதிவு செய்து கொள்ளலாம். பருத்தி பயிர் விவசாயிகள் வரும் 31 ஆம் தேதிக்குள் முன்மொழிவு விண்ணப்பத்துடன், பதிவு விண்ணப்பம் வி.ஏ.ஓ வழங்கும் அடங்கல், வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், ஆதார் அட்டைநகல் ஆகியவற்றை இணைத்து கட்டண தொகையை செலுத்திய பின் அதற்கான ரசீதை பயிர்காப்பீடு கட்டணம் செலுத்திய இடத்தில் பெற்றுக்கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.