திருவனந்தபுரம், ஆக.12- பக்ரீத்துக்காக தனது கடையில் விற்பனைக்காக வாங்கி வைத்திருந்த ஏராளமான துணிகளை கேரள வெள்ள நிவாரணத்துக்கு வழங்கிய நவுஷாத் மனிதர்களுக்கு உதவுவதே லாபம்தான் என கூறி இரண்டு மூடைகளை நிரப்பும் காட்சி சமூக ஊடகங்களில் பரவி கேரள மக்களை நெகிழ வைத்துள்ளது. கடந்த ஆண்டு ஏற்பட்ட பெருவெள்ளத்துக்கு இணையான பாதிப்புகளை இம்முறை வயநாடு, மலப்புறம் மாவட்டங்களில் கனமழை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழப்புகள் அதிகரித்த வண்ணம் உள்ளன. இரண்டரை லட்சத்துக்கும் மேற்பட்டோர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர் களுக்கான நிவாரண பொருட்களை தன்னார்வலர்கள் சேகரித்து வருகிறார்கள்.
எர்ணாகுளம் பிராட்வேயில் துணிக்கடை வைத்திருப்பவர் நவுஷாத். இவர் தனது கடைக்கு நிவாரணம் சேகரிக்கும் தன்னார்வ லர்களை அழைத்துவந்து புத்தம் புதிய துணிகளை இரண்டு மூடைகளை நிரப்பி கொடுக்கிறார். இவ்வளவு துணி களை தருகிறீர்களே உங்களுக்கு நஷ்டமில்லையா என்று கேட்ட போது, நாளை பெருநாளல்லவா (பக்ரீத்) எனது பெருநாள் இப்படித்தான். நாம் போகும் போது இதையெல்லம் கொண்டு செல்ல முடியாதல்லவா?. மனிதர்களுக்கு உதவுவது நஷ்டமல்ல எனக்கு லாபம்தான் என்றார். கேரள முதல்வரின் வெள்ள நிவாரண நிதிக்கு உதவக்கூடாது என பாஜக சங்பரிவார் அமைப்பினர் பிரச்சாரம் செய்து வரும் நிலையில் நவுஷாத்தின் கொடையை சமூக ஊடகங்கள் மூலம் கேரள மக்கள் கொண்டாடி வருகிறார்கள்.