மும்பை:
மத்திய அரசை விமர்சிப்பதற்கே அச்சப்படும்படியான ஒரு சூழல்தான் நாட்டில் தற்போது நிலவிக் கொண்டிருக்கிறது என்று இந்தியாவின் பிரபலதொழிலதிபர்களில் ஒருவரும், பஜாஜ்குழுமத்தின் தலைவருமான ராகுல் பஜாஜ் அதிரடியாக குற்றம் சாட்டியுள்ளார்.‘எக்னாமிக் டைம்ஸ்’ நாளிதழ் ஒருங்கிணைத்த விருது வழங்கும் விழா, மும்பையில் சனிக்கிழமையன்று நடைபெற்றது. இந்த விழாவில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் உள்ளிட் டோர் கலந்துகொண்ட நிலையில், அவர்களை முன்னால் வைத்துக் கொண்டே, ராகுல் பஜாஜ் இந்த குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார்.
“காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில்நாங்கள் பயமின்றி அரசை விமர்சித் தோம். அதற்கான சுதந்திரம் இருந்தது.பொருளாதாரம் இன்று மோசமாக இருக்கிறது. புதிய முதலீடுகள் இல்லை. ஆனாலும் கூட, எங்கள் கார்ப்பரேட் துறையில் உள்ளவர்களால் தற்போதைய மத்திய அரசை விமர்சிக்க முடியவில்லை. அவர்கள் அச்சப்படுகிறார்கள். அரசைவிமர்சித்தால் தாக்குதலுக்கு உள்ளாவோமோ என்ற பயம் உள்ளது. சில தொழிலதிபர்கள் என்னிடம் புதியதொழில் தொடங்கவே பயமாக இருக்கிறது எனக் கூறுகிறார்கள். அரசின் நடவடிக்கைகளுக்குப் பயந்தே அப்படிப் பேசுகின்றனர். என்னைப் போன்ற தொழிலதிபர்கள் யாரும் இதை வெளிப்படையாகப் பேசமாட்டார்கள். ஆனால், நான்பேசுகிறேன்.
தொழிலதிபர்கள் மட்டுமல்ல எல்லோரும்- ஏன் மக்களும் பயத்தோடுதான் வாழ்கிறார்கள். கும்பல் கொலைகள்சகிப்பின்மை சூழலை உண்டாக்குகிறது. ஆனால், கும்பல் கொலைகள்தொடர்பாக யாரும் தண்டிக்கப்படவில்லை. பிரக்யா தாக்குர் போன்றவர்கள் மக்களவையில் பேசுவது அதிர்ச்சி அளிக்கிறது. காந்தியை சுட்டுக்கொன்றது யார் என்று எல்லோருக்கும் தெரியும். ஆனால், அவரை தேசபக்தர் எனச் சொல்பவரை மத்திய அரசு எது வும் செய்யவில்லை. அவருக்கு வாய்ப்பளித்துக்கொண்டே இருக்கிறீர்கள். அவர் பாதுகாப்புத்துறைக்கான ஆலோசனைக்குழுவில் நியமிக்கப்படுகிறார்.
இவையெல்லாம் சமூகத்தில் அச்சத்தை ஏற்படுத்துகின்றன. இவற்றை விமர்சிக்க யாருக்கும் தைரியம் இல்லை. இது மாற வேண்டும்” என்று ராகுல் பஜாஜ் கூறியுள்ளார்.‘ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்’ தலைவர் முகேஷ் அம்பானி, ‘ஆதித்யா பிர்லா’குழுமத்தின் தலைவர் குமார் மங்கலம் பிர்லா, ‘பாரதி எண்டர்பிரைசஸ்’ தலைவர் சுனில் பாரதி மிட்டல் உள்ளிட்ட நாட்டின் பெரும் பணக்காரர்கள் அனைவரையும் உட்கார வைத்துக் கொண்டு, பஜாஜ் இவ்வாறு பேசியது, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.குறிப்பாக, மேடையில் இருந்தஅமித்ஷா உள்ளிட்ட மத்திய அமைச் சர்களுக்கு பெரும் மூக்குடைப்பாக அமைந்துள்ளது.இதனிடையே, பஜாஜ் பேச்சுக்கு பதிலளித்த அமித்ஷா “எதைப்பற்றியும் யாரும் அச்சப்படத் தேவையில்லை. அதிகம் விமர்சிக்கப்படும் அரசாங்கமாக நரேந்திர மோடி அரசாங்கம்தான் இருக்கிறது; அச்சுறுத்தல் இருப்பதாக பஜாஜ் போன்றவர்கள் கூறினால், அதனை மாற்ற வேண்டியது அவசியம்” என்று மட்டும் பட்டும்படாமல் சமாளித்துச் சென்றுள்ளார்.மறுபுறத்தில், ராகுல் பஜாஜ் பேச்சுக்கு பாஜக கட்சி சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற பேச்சுக்களை அனுமதிக்க மாட்டோம்; பாஜக இதனை வன்மையாகக் கண்டிக்கிறது என்று வழக்கம் போல பாய்ந்துள்ளது.