சபரிமலை விவகாரத்தில் பிரதமர் மோடி முற்றிலுமாக பொய் பேசுகிறார் என கேரள முதல்வர் பினராயி விஜயன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
மாநிலங்களின் முக்கிய பிரச்சனைகளின்போது வருகை தராத பிரதமர் மோடி தேர்தல் பிரச்சாரத்துக்காக பலமுறை வருகை தருகிறார் என விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில் நேற்று தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவிற்கு பிரதமர் மோடி பிரச்சாரப் பயணம் மேற்கொண்டார். அப்போது சபரிமலை விவகாரம் குறித்து பேசிய அவர் கேரளா பக்தர்களை சிறையிலடைக்கும் மாநிலம் என பிரச்சாரம் செய்தார். இன்று கேரளாவின் கொல்லம் பகுதியில் கேரளாவின் இடது ஜனநாயக கூட்டணி சார்பில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட கேரள முதல்வர் பினராயி விஜயன் பதிலடி கொடுத்துள்ளார்.
முதல்வர் பினராயி விஜயன் பேசுகையில், ”பிரதமர் பேசுவது முற்றிலும் பொய்யான ஒன்று. ஒரு பிரதமர் எவ்வாறு இத்தகைய தவறான விசயத்தை பேச முடிகிறது. ஒருவர் சட்டத்திற்கு புறம்பாக செயல்படும்போது மட்டுமே கைது செய்யப்படுவார். மற்ற சங்பரிவாரைச் சேர்ந்தவர்கள் உள்ள மாநிலங்களில் வேண்டுமானாலும் சங்பரிவாரங்களுக்கு எதிராக எந்த கைதும் நடைபெறாமல் இருக்கலாம். ஆனால் அது கேரளாவில் நடக்காது.” இவ்வாறு அவர் பதிலடி கொடுத்தார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு அனைத்து வயது பெண்களையும் சபரிமலை கோவிலினுள் அனுமதிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை அமுல்படுத்த முயன்ற கேரள இடது ஜனநாயக அரசுக்கு எதிராக பா.ஜ.க-ஆர்.எஸ்.எஸ் சங்பரிவார் அமைப்புகள் பல வன்முறையில் ஈடுபட்டன. இதனால் அம்மாநில அரசு செய்த கைது நடவடிக்கையை திரித்து தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு பிரதமர் மோடி அரசியல் ஆதாயம் தேடி வருகிறார் என்பது வெட்ட வெளிச்சமாகியுள்ளது.