பந்தளம்:
பந்தளத்தில் சபரிமலை பிரச்சனையில் நாமஜெப ஊர்வலத்திற்கு தலைமை தாங்கிய தர்மசம்ரக்சண சமிதியின் தலைவரும், பாஜகவின் முக்கிய தலைவருமான எஸ்.கிருஷ்ணகுமார் உள்ளிட்ட உயர்மட்ட தலைவர்களும் ஊழியர்களும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சியில் இணைந்தனர்.
பந்தளம் உள்ளாட்சித் தேர்தலின் போது, தொடங்கிய பிளவு இந்த கட்சிகளுக்குள் மேலும் ஆழமாகி வருகிறது.மோடியின் விவசாயிகள், மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், மாநில, மாவட்ட- உள்ளூர் பாஜக தலைவர்களின் கோஷ்டி விளையாட்டுகளை சகிக்க முடியாமலும், இவர்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து பணியாற்ற முடிவு செய்துள்ளனர்.பிஎம்எஸ் வட்டார இணைச் செயலாளர் எம்.சி சதாசிவன், பாஜக பந்தளம் நகரக் குழுவின் துணைத் தலைவர் எம்.ஆர்.மனோஜ் குமார், பாலகோகுலம் முன்னாள் தாலுகா செயலாளர் அஜயகுமார் வாளக்கோட்டு, முன்னாள் நகராட்சி குழு துணைத் தலைவர் சுரேஷ், மகிளா மோர்ச்சா ஆரண்முளா தொகுதிச் செயலாளர் ஸ்ரீலதா உட்பட 30 க்கும் மேற்பட்ட தலைவர்கள் மற்றும் ஊழியர்கள் பாஜகவை விட்டு வெளியேறியுள்ளனர்.சபரிமலை பிரச்சனையில் பந்தளத்தில் நடந்த நாமஜெப ஊர்வலத்தின் பின்னணியில் சூத்திரதாரியாக செயல்பட்டவர் எஸ்.கிருஷ்ணகுமார் ஆவார். இங்கு நடந்த கலவரத்தின்போது கிருஷ்ணகுமார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர் சிறையில் அடைக்கப்பட்டார். ஆனால் பாஜகவின் உயர் தலைவர்கள் கிருஷ்ணகுமாரை திரும்பிப் பார்க்கவில்லை.
பத்தனம்திட்டா டிசிசி உறுப்பினரும் முன்னாள் பஞ்சாயத்து உறுப்பினரும் காங்கிரஸ் பந்தளம் தொகுதி பொதுச் செயலாளருமான வி.டி. பாபு, விவசாயிகள் காங்கிரஸ் அடூர் தொகுதித் தலைவர் மற்றும் கட்டுமானத் தொழிலாளர் சங்கத் தொகுதித் தலைவர் பந்தளம் விஜயன், அடூர் தொகுதித் தலைவர் இடிக்குளம் வர்க்கீஸ் உட்பட 25 க்கும் மேற்பட்ட காங்கிரஸ் தலைவர்களும் ஊழியர்களும் சிபிஎம்-இல் இணைந்துள்ளனர்.அவர்களை வியாழனன்று பந்தளத்தில் நடந்த வரவேற்பு நிகழ்ச்சியில் சிபிஎம் மாநில பொறுப்பு செயலாளர் ஏ. விஜயராகவன் வரவேற்றார். பந்தளம் தெக்கேகரா பஞ்சாயத்து தேர்தலில் ஏற்பட்ட பெரும் தோல்வியும், அதன் பின்னர் ஏற்பட்ட குழப்பமும் ஒரு கூட்டு ராஜினாமாவுக்கு வழிவகுத்தது. அடூரில் உள்ள தொகுதி முகாமை பாஜக தலைமை புறக்கணித்ததைத் தொடர்ந்து, அந்த பஞ்சாயத்து குழுவும் முழுமையாக ராஜினாமா செய்வதாக அறிவித்தது.