மும்பை:
மக்களவைத் தேர்தலில், நாட்டின் முதல் பணக்காரரான முகேஷ் அம்பானி, காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் மிலிந்த் தியோராவுக்கு ஆதரவு கோரியிருந்த நிலையில், மகன் ஆனந்த் அம்பானி மோடியின் பேரணியில் கலந்துகொண்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.
மும்பை தெற்குத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் முன்னாள் மத்திய இணையமைச்சர் மிலிந்த் தியோரா போட்டியிடுகிறார். இவர் ஒரு பிரச்சார வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். அதில், மும்பையில் குறுந்தொழில் முதல் பெரும் தொழிற்சாலைகள் வரை செழிக்க மிலிந்த் தியோரா பாடுபடுவார்; எனவே, மக்கள் அவருக்கு வாக்களிக்க வேண்டும் என்று ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி பிரச்சாரம் செய்திருந்தார்.
இதையடுத்து, அம்பானி காங்கிரசை ஆதரிக்கிறாரா? என்று பாஜக-வினர் சர்ச்சைகளை கிளப்பி வந்தனர். எனினும் அம்பானி தரப்பில் பதில் எதுவும் அளிக்கப்படவில்லை.
இந்நிலையில், முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி, திடீரென நரேந்திர மோடியின் தேர்தல் பேரணியில் கலந்துகொண்டு, கணக்கை சரிக்கட்டியுள்ளார். அதாவது, என் அப்பா காங்கிரசுக்கு ஆதரவாக பேசியிருந்தார்; நான் பாஜக கூட்டத்தில் கலந்து கொண்டு விட்டேன்; இத்துடன் கணக்கு சரியாகி விட்டது; எனவே, யார் ஆட்சிக்கு வந்தாலும் எங்கள் பிழைப்புக்கு எந்த சிக்கலும் வந்துவிடக் கூடாது என்பதாக ஆனந்த் அம்பானியின் இந்த நடவடிக்கை அமைந்துள்ளது.