tamilnadu

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

பாஜக அரசை கண்டித்து வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி ஒன்றியம், இலுப்பூர்-சங்கரன்பந்தல் கடைவீதியில், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் வக்ஃபு சட்ட திருத்தத்தை திரும்ப பெறக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம் சனியன்று மாலை ஒன்றிய செயலாளர் பவுல் சத்தியராஜ் தலைமையில் நடைபெற்றது. ஒன்றிய நவ பாசிச மோடி அரசே, சிறுபான்மை மக்களின் உரிமைகளை நசுக்காதே, வக்ஃபு சட்ட திருத்தத்தை திரும்பப் பெறு என முழங்கியும், நவ பாசிச நடவடிக்கையை கண்டித்தும் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சங்கத்தின் மாவட்ட தலைவர் அய்யப்பன், சங்க நிர்வாகிகள் ரஷ்யா, ராமச்சந்திரன் உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர்.

‘மக்களுடன் முதல்வர்”  திட்ட முகாம்கள் அமைச்சர்கள்  தொடங்கி வைத்தனர்

புதுக்கோட்டை, ஏப்.13-  புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில்  நடைபெற்ற ‘மக்களுடன் முதல்வர்” திட்ட முகாம்கனை சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் ஆகியோர் சனிக்கிழமை தொடங்கி வைத்தனர்.  நிகழ்வுகளுக்கு மாவட்ட ஆட்சியர் மு.அருணா தலைமை வகித்தார். முன்னாள் அரசு வழக்கறிஞர் கே.கே.செல்லப்பாண்டியன், மாவட்ட வருவாய் அலுவலர் அ.கோ.ராஜராஜன், புதுக்கோட்டை மாநகராட்சி துணை மேயர் எம்.லியாகத் அலி, தஞ்சாவூர் மாநகராட்சி துணை மேயர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தமிழ் பல்கலைக்கழகத்தில் சித்திரைத் திருநாள்  50 விழுக்காடு சிறப்புத் தள்ளுபடி விற்பனை

தமிழ்ப் பல்கலைக்கழகப் பதிப்புத்துறையில் சித்திரைத் திருநாளை முன்னிட்டு 2025 ஏப்ரல் 15ஆம் நாள்முதல் மே 14 ஆம் நாள்வரை ஒரு மாத காலத்திற்கு தமிழ்ப் பல்கலைக்கழக வெளியீட்டு நூல்கள் 50 விழுக்காடு சிறப்புத் தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்படவுள்ளன.  அறிஞர் பெருமக்களும், மாணவர்களும், பொதுமக்களும் இவ்வரிய வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொள்ளலாம். தஞ்சாவூர், தமிழ்ப் பல்கலைக்கழகம் பதிப்புத்துறை விற்பனைப்பிரிவு, வாகை வளாகத்தில் நூல்கள் கிடைக்கும். மேலும், அலைபேசி எண்-9489102276 இல் தொடர்பு கொள்ளலாம் என பல்கலைக்கழக நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செங்கிப்பட்டி  காச நோய் மருத்துவமனை மருத்துவ அலுவலர் காலிப்பணியிடத்துக்கு விண்ணப்பிக்கலாம்

தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டி மகாத்மா காந்தி நினைவு காச நோய் மற்றும் மார்பு நோய் மருத்துவமனையில், மருத்துவ அலுவலராகப் பணிபுரிய விருப்பம் உள்ள எம்.பி.பி.எஸ் பட்டப்படிப்பு முடித்தவர்களிடம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.  குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் பணி முன் அனுபவம் உள்ளவர்களும், அரசு மருத்துவ அலுவலராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம். காசநோய் மருத்துவத்தில் சிறப்பு படிப்பு படித்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். மருத்துவ அலுவலர் பணிக்கு தொகுப்பூதியமாக மாதம் ரூ.40 ஆயிரம் வழங்கப்படும். விண்ணப்பங்கள் மாவட்ட ஆட்சியர் மற்றும் நிர்வாகக் குழுத்தலைவர், மகாத்மாகாந்தி நினைவு காச நோய் மற்றும் மார்பு நோய் மருத்துவமனை, செங்கிப்பட்டி, தஞ்சாவூர் என்ற முகவரிக்கு 25.04.2025-ஆம் தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும் என தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.

பேராவூரணி அருகே  கிளை வாய்க்கால்  தூர் வாரும் பணி துவக்கம் 

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி ஒன்றியம் வலப்பிரமன்காடு கிராமத்தில், வீரக்குடி வாய்க்கால் சுமார் 4.60 கி.மீ தூர்வாரும் பணி ரூ.8.60 லட்சம் மதிப்பீட்டில் நடைபெறுகிறது.  இதனை பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் நா.அசோக்குமார் தலைமை வகித்து துவக்கி வைத்தார். இதில், பேராவூரணி தெற்கு திமுக ஒன்றியச் செயலாளர் க.அன்பழகன், பொதுப்பணித்துறை நீர்வள ஆதாரத்துறை உதவி செயற்பொறியாளர் சண்முகம், உதவி பொறியாளர்கள் காதர் ஒலி, சாக்ரடீஸ், கிளைச் செயலாளர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

விவசாயிகள் நில உடைமை விவரங்கள் பதிவு  நாளை வரை கால அவகாசம் நீட்டிப்பு: மாவட்ட ஆட்சியர்

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள், தங்கள் நில உடைமை விவரங்களை பதிவு செய்து கொள்ள ஏப்ரல் 15 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. பிரதமர் கௌரவ உதவித்தொகை திட்டத்தில் பயன்பெற, தனித்துவ அடையாள எண் பெறுவது அவசியம். இதற்கு ஏப்ரல் 15 கடைசி நாளாகும். விவசாயிகளை ஊக்குவிக்கும் விதமாக பிரதமரின் கௌரவ உதவித்தொகை, மானியத்தில் சொட்டுநீர் பாசனக் கருவிகள், வேளாண் உபகரணங்கள் மற்றும் இயந்திரங்களை வழங்கி ஒன்றிய, மாநில அரசுகள் ஊக்குவித்து பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. ஒன்றிய அரசு வழங்கும் பிரதமரின் கௌரவ உதவித்தொகை விவசாயி அல்லாதவர்களுக்கு சென்று விடக்கூடாது என்று இணைய வழியில் பதிவு செய்து ஒன்றிய அரசு பிரதமரின் கௌரவ உதவித்தொகை விவசாயிகளுக்கு நேரடியாக வழங்கி வருகிறது.  விவசாயிகள் அரசின் நேரடி கண்காணிப்பில் இருக்கவும், அரசின் திட்டங்களில் விவசாயிகள் அல்லாத நபர்கள் பயனடைய கூடாது என்பதற்காக ஒவ்வொரு விவசாயிக்கும் தேசிய அடையாள அட்டை வழங்குவதற்கு வேளாண் அடுக்ககம் திட்டத்தின் கீழ் விவசாயிகளின் சுய விவரங்களை பதிவேற்றம் செய்யும் பணிகளை வேளாண்துறையினர் தீவிரப்படுத்தி உள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் வேளாண்மை, தோட்டக்கலை, வணிகத்துறை, வேளாண் பொறியியல் துறை, விதை சான்றளிப்பு துறை சார்ந்த கள அலுவலர்கள், மகளிர் திட்ட சமுதாய பயிற்றுநர்கள், இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள் ஆகிய துறையினர் வாயிலாக, அனைத்து கிராமங்களிலும் முகாம்கள் நடத்தப்பட்டு விவசாயிகளுக்கு அடையாள எண் வழங்கும் பணியினை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது அனைத்து பொதுசேவை மையங்களிலும் இலவசமாக பதிவேற்றம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இதுவரை சுமார் 92,000 விவசாயிகள் மட்டுமே இத்திட்டத்தில் தங்களை இணைத்து கொண்டுள்ளனர். மீதமுள்ள விவசாயிகள் உடனடியாக தங்கள் நிலம் தொடர்பான ஆவணங்களான பட்டா, ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்ட செல்போன் எண்ணுடன் அரசு அலுவலர்களையோ அல்லது பொது சேவை மையங்களையோ ஏப்ரல் 15 ஆம் தேதிக்குள் தொடர்பு கொள்ள வேண்டும். ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு, விவசாயிகள் செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்ட பின்னர், தனி அடையாள எண் வழங்கப்படும். இதுவரை 4 மாதங்களுக்கு ஒரு முறை என 19 தவணைகளாக பிரதமரின் கௌரவ உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது.  தனி அடையாள எண் பெற்ற விவசாயிகளுக்கு மட்டுமே 20 ஆவது தவணை ஊக்கத்தொகை ஏப்ரலில் விடுவிக்கப்படும். தனி அடையாள எண் பெற பதிவேற்றம் செய்யாத விவசாயிகளுக்கு 20 ஆவது தவணை வங்கி கணக்கில் இருப்பு வைக்கப்படாது.  மேலும், இதற்கான கால அவகாசம் மார்ச் 31 வரை வழங்கப்பட்டுள்ள நிலையில் விவசாயிகளின் கோரிக்கையினை ஏற்று தமிழக அரசு ஏப்ரல் 15 வரை கால நீட்டிப்பு செய்துள்ளது. எனவே, விவசாயிகள் அனைவரும் இந்த நல்வாய்ப்பினை பயன்படுத்தி, இனியும் காலம் தாழ்த்தாமல் பிரதமரின் கௌரவ உதவித்தொகை பெறவும் மற்ற ஏனைய மானியங்களை பெறவும் வேளாண்மை உழவர் நலத்துறை அலுவலர்கள் மற்றும் பொதுசேவை மையங்களை அணுகி விரைவாக தனி அடையாள எண் பெற வேண்டும் என மாவட்ட ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.