தமிழக ஆளுநர் கல்லூரி விழாக்களுக்குச் செல்ல வெட்கப்பட வேண்டும்
திராவிட கழக தலைவர் கி.வீரமணி பேட்டி
கும்பகோணத்திற்கு வருகை தந்த திராவிட கழகத் தலைவர் கி.வீரமணி பத்திரிகையாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: பாஜக, அதிமுக கூட்டணி என்பது எடப்பாடி பழனிச்சாமி அதிமுக-வை வீழ்ச்சியை நோக்கி கொண்டு செல்லும் கூட்டணி ஆகும். இந்த கூட்டணி முதன்முறை அல்ல. எனவே தான் தமிழக முதல்வர், இந்த கூட்டணி கள்ள கூட்டணி என்றும், சில பேர் கள்ள உறவு என்றும் அழைத்து வருகின்றனர். தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி கல்லூரி விழாக்களுக்கு செல்வதற்கு வெட்கப்பட வேண்டும். உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி, தமிழக ஆளுநருக்கு இனிமேல் எந்த உரிமையும் கிடையாது. விழாக்களில் ஜெய் ஸ்ரீராம் என்னும் கோஷங்கள் இந்திய மதசார்பின்மைக்கு எதிரானதாகும். எனவே தான் தற்போது ராமரும் தமிழக ஆளுநரை கைகழுவினார். ஒன்றிய பாஜக அரசு, தமிழக ஆளுநரை சாவி கொடுக்கும் பொம்மையாக செயல்படுத்தி வருவது நிரூபணம் ஆகி உள்ளது. தனியார் கல்லூரி விழாக்களில் மதவிசயம் பற்றி கருத்து தெரிவிப்பதால் மதக் கலவரம் ஏற்படும் சூழ்நிலையே தமிழகத்தில் உருவாகும். எனவே இது போன்ற தனியார் கல்லூரிகள் தமிழக அரசுக்கு விளக்கம் அளிக்க வேண்டும் என அரசு உத்தரவு இட வேண்டும். உள்துறை அமைச்சர் அமித்ஷா, திமுக மீது ஊழல் குற்றச்சாட்டை சுமத்துகிறார். ஆனால் கூட்டணியில் உள்ள பாஜக தான், ஜெயலலிதாவை ஊழல் குற்றம்சாட்டி வந்ததை தமிழக மக்கள் அனைவரும் அறிந்துள்ளனர். கவர்னர்கள் குறித்த உச்சநீதிமன்ற தீர்ப்பு அசைக்க முடியாத புரட்சிகரமான தீர்ப்பு. அரசியல் சட்டத்தில் வரைமுறைக்கு உட்பட்ட தீர்ப்பு. எனவே, பாஜகவை இந்த தீர்ப்பு அதிர்ச்சிக்குள்ளாக்கும். பாஜகவின் புதிய தலைவர் நயினார் நாகேந்திரன் தமிழகத்தில் 234 தொகுதிகளில் கூட்டணியில் 40 தொகுதி வரை வென்று வரலாம் என்று கூறினார். அவரே கூட்டணி பற்றிய தோல்வியை ஒப்புக் கொண்டுள்ளார். முன்னாள் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலைக்கு தமிழகத்தில் ஆட்சி கிடையாது அவர் போடாத செருப்பு வேண்டுமானால் கிடைத்துள்ளது. தமிழக மக்களை ஒருபோதும் பிளவு படுத்தி பிரிக்க முடியாது என அவர் தெரிவித்தார்.