கொரோனா தொற்று ஒருபுறமும், ஊரடங்கால் ஏற்பட்ட பொருளாதார இழப்பால் பசி மறுபுறம் என தினக்கூலிகளாக உள்ள மக்களை வாட்டி வதைக்கிறது. இப்படிப்பட்ட மக்களுக்காக இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் களத்தில் இறங்கியுள்ளது. நலிவடைந்த மக்களுக்கான நிவாரணப் பணிகளின் ஒருபகுதியாக ஒரு நாள் மதுரை மாநகர் ஜெய்ஹிந்த்புரம் பகுதி பொருளாளர் தோழர் சத்யா வீட்டிற்கு நிவாரண உதவி பொருட்கள் கொடுக்கச் சென்றோம்.
மாநகராட்சி தூய்மைப் பணியாளராக (தினக்கூலி) பணி புரியும் அவரது தாயார், “வேண்டாம்பா எனக்கு ஏதோ சம்பளம் வருது, இதுவும் இல்லாம இருக்கிறவுங்களுக்கு கொடுங்க தம்பி’’ என்று சொல்லி எங்களையெல்லாம் நெகிழச் செய்தார் அந்த தாய். பேசிக்கொண்டிருக்கும் போது காலையில் 4.30 மணிக்கு வேலைக்கு கிளம்பனு சொல்லிக்கொண்டே புறப்பட்டார். “வேலையை விட ஜெய்ஹிந்த் புரத்தில் இருந்து நெல்பேட்டை வரை வேலை பார்க்கிற இடத்திற்கு நடந்தே போவது பெரிய கஷ்டமா இருக்கு’’ என்று அவர் சொன்ன போது அந்த அம்மாவின் கால் வலி எங்களுக்கும் வலித்தது.கொரோனா பேரிடர் காலத்தில் மருத்துவர்கள், காவலர்கள், அரசு ஊழியர்கள் என பலரும் கடினமாக உழைக்கின்றனர். இருப்பினும் சரியான பாதுகாப்பு கவசங்கள் கூட இல்லாமல் மக்களின் ஆரோக்கியத்திற்காக கடுமையாக பணியாற்றிக் கொண்டிருக்கும் தூய்மைப் பணியாளர்களை நாம் தூக்கி கொண்டாட வேண்டாமா? “அவர்களுக்கு மரியாதை செய்வது என்பது துண்டு, மாலை அணிவிப்பது அல்ல”.
அவர்களின் பணிச் சுமையை குறைப்பது தான் உண்மையில் நாம் அவர்களுக்கு செய்யும் மரியாதையாக இருக்கும் என வாலிபர் சங்கத் தோழர் கள் யோசித்தோம். அந்த அடிப்படையில் மதுரையில் 4 மையங்களில் களத்தில் இறங்கினோம்.சாலையில் குவிந்துள்ள மண்மேடுகளை அகற்ற முடிவெடுத்தோம். இதற்காக வாகனப் போக்குவரத்து குறைவாக உள்ள காலை நேரங்களில் முன்னெச்சரிக்கையுடன் மண்வெட்டி உள்ளிட்ட கருவிகளைக்கொண்டு சாலையை சுத்தம் செய்யும் பணியில் இறங்கினோம். ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் அரவிந்த் தியேட்டர் முதல் ஜீவா நகர் வரை 2 கி.மி சாலையை சுத்தம் செய்தோம். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தோழர். நன்மாறன் நேரில் வந்து, “சேவை நமது அமைப்புடன் பிறந்தது’’ என்று சொல்லி தோழர் களை உற்சாகப்படுத்தினார்.
பழங்காந்த்தம் கீழ் பாலத்தில் குவிந்துள்ள மண்ணை அகற்ற ஒரு குழுவும், மேலப்பொன்னகரம் கருடர் பாலத்தில் மண்ணை அகற்ற ஒரு குழுவும் கதிரவனை முந்தி 7 மணிக்கே வேலையை துவக்கினர். ஜல்லிகட்டு காளைகளுக்கான போராட்டத்தில் நிரம்பி வழிந்த வரலாற்று சிறப்புமிக்க தமுக்கம் பகுதியில் குப்பை மற்றும் மண்குவியல்களை அகற்றி, மருந்து தெளித்து சுத்தம் செய்தனர் வாலிபர் சங்க காளையர்கள். 4 மையங்களில் 120 பேர் 3 மணி நேரம் மண் அகற்றும் பணியில் வெயிலோடு மல்லுக்கட்டி பணியை நிறைவு செய்தனர்.
ஓர் இடத்தில் மருத்துவர் ,இன்னொரு இடத்தில் காவலர் என குளிர்பானம் வாங்கிக் கொடுத்து வாலிபர்களை உற்சாகப்படுத்தினர். ஓர் இடத்தில் தோழர்கள் டீ குடித்து முடித்த பிறகு டீ க்கு காசு கொடுக்கும் போது கடைக்காரர் வேண்டாம் என்று அன்புடன் சொல்லி வாழ்த்தினார். இப்படி பலரும் தங்களின் வாழ்த்துகளையும், அன்பையும் பல்வேறு வகையில் வெளிப்படுத்தி தோழர்களின் உழைப்பை இதமாக்கினர்.எல்லாவற்றையும் விட பணியை நிறைவுசெய்யும் தருவாயில் எங்களை கடந்த துப்புரவு பணி செய்யும் இரு தாய்மார்கள், “யாருப்பா தம்பி நீங்க? நீங்க ஏன் இந்த வேலையை செய்யுறீங் கன்னு” கேட்டுட்டு நல்லா இருங்கப்பா என்று வாழ்த்தினார்கள். இதுபோன்ற சேவையால் மக்களுடன் நெருக்கமாக பழக வாய்ப்பு கிடைப்பதோடு வாலிபர் சங்கம் குறித்து பொதுமக்கள் மத்தியில் புதிய நம்பிக்கையையும் விதைத்துள்ளது.
-செல்வா, மதுரை மாநகர் மாவட்டச் செயலாளர், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம்