தீர்ப்பு வரும் வரை கட்சி கொடிக் கம்பத்தை அகற்ற மாட்டோம்!
சிபிஎம் பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் திட்டவட்டம்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கொடி கம்பங்களை அகற்றுதல் தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவினை எதிர்த்து தில்லி உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்படவுள்ளது. இவ்வழக்கின் தீர்ப்பு வரும் வரை எங்கள் கட்சி கொடிக் கம்பத்தை அகற்ற மாட்டோம் என மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் ரமேஷ் தெரிவித்து உள்ளார். பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவ லக கூட்டரங்கில் பொது இடங்களில் உள்ள கொடிக் கம்பங்களை அகற்றுதல் தொடர் பான அரசியல் கட்சி பிரதிநிதிகளுடான கலந் தாய்வு கூட்டம் செவ்வாயன்று நடைபெற்றது. கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாவட்டச் செயலாளர் பி.ரமேஷ் பேசுகையில், “அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உழைக்கும் மக்களை அடையாளம் காண்ப தற்காகத்தான் கொடி கம்பங்கள் வைக்கப் பட்டுள்ளன. இந்த கட்சி கொடி கம்பங்களை அகற்றுவது என்பது ஜனநாயக விரோத மானது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கருதுகிறது. எனவே எங்களது கட்சிக் கொடி கம்பங்களை அகற்றுவதற்கு வாய்ப்பு இல்லை. மேலும் கொடிக் கம்பங்கள் அகற்றும் இந்த முடிவை மறுபரிசீலனை செய்து தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தின் (மதுரை கிளை) உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். கொடிக் கம்பங்கள் அகற்றுதல் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தின் (மதுரை கிளை) உத்தரவை எதிர்த்து எங்கள் கட்சி யின் தமிழ்நாடு மாநிலக் குழு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளோம். எனவே வழக்கு தீர்ப்பு வரும் வரை எங்கள் கட்சி கொடிக் கம்பத்தை அகற்ற மாட்டோம்” என தெரிவித்து மனு அளித்துள்ளார்.