செஞ்சட்டைப் பேரணியால் சிவந்தது விசாகப்பட்டினம் சிஐடியு 18ஆவது அகில இந்திய மாநாடு இன்று துவக்கம்!
இந்தியத் தொழிலாளர் வர்க்கத்தின் போர்க்குணமிக்க அமைப்பான சிஐடியு-வின் 18-ஆவது அகில இந்திய மாநாடு விசாகப்பட்டினத்தில், புதன்கிழமை (டிச. 31) துவங்குகிறது. இதையொட்டி, டிசம்பர் 30 செவ்வாயன்று காலை காளிமாதா கோவிலிலிருந்து மாநாடு நடைபெறும் ஏ.யு. கன்வென்ஷன் ஹால் வரை மாபெரும் செஞ்சட்டைப் பேரணி நடைபெற்றது. ஒருபுறம் சூரியக் கதிர்கள், மறுபுறம் அணிவகுத்து வந்த செஞ்சேனை என விசாகப்பட்டினம் கடற்கரை சிவப்பால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. “ஒன்றிய பாஜக அரசே தொழிலாளர் சட்டத் தொகுப்புகளை ரத்து செய்”, “பொதுத்துறை மற்றும் அரசியலமைப்பைப் பாதுகாப்போம்”, “சோசலிசமே வெல்லும்” என்ற முழக்கங்களுடன் இளைஞர்கள் இந்தப் பேரணியில் எழுச்சியுடன் அணிவகுத்தனர். சிஐடியு ஆந்திர மாநிலத் தலைவர் ஏ.வி. நாகேஸ்வர ராவ், செயலாளர் ஆர்.கே.எஸ்.வி. குமார் உள்ளிட்ட தலைவர்கள் முன்னிலையில் நடைபெற்ற இந்தப் பேரணி, சிஐடியு அகில இந்திய மாநாட்டிற்கான பிரம்மாண்ட அறைகூவலாக அமைந்தது.
