சென்னை, நவ.10- மூத்த திரைக் கலைஞர் டெல்லி கணேஷ், உடல் நலக்குறை வால் சென்னை ராமாபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் சனிக்கிழமையன்று (நவ.9)உயிரிழந்தார். அவருக்கு வயது 80. தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் 400 படங்களுக்கு மேல் நடித்துள்ள டெல்லி கணேஷ் கமல்ஹாசன், ரஜினிகாந்த், விஜயகாந்த் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். குணச்சித்திர நடிகராகவும், நகைச்சுவை நடிகராகவும் தமிழ் சினிமாவில் வலம்வந்தவர் டெல்லி கணேஷ். கடந்த 1944 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 1 ஆம் தேதி நெல்லையில் பிறந்த டெல்லி கணேஷ், 1964 முதல் 1974 ஆம் ஆண்டு வரை இந்திய விமானப் படையில் பணியாற்றியுள்ளார். இதையடுத்து சினிமா மற்றும் நடிப்பு மீது ஆர்வம் கொண்ட இவர், 1976 இல் இயக்குநர் கே.பாலச்சந்தரின் ‘பட்டினப்பிரவேசம்’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். குறும்படங்கள், டிவி நெடுந்தொடர்கள், வெப் தொடர்களிலும் நடித்துள்ளார். மறைந்த டெல்லி கணேஷ்-க்கு தங்கம் என்ற மனைவியும், பிச்சு லட்சுமி, சாரதா ஆகிய இரு மகள்களும், மகாதேவன் என்ற மகனும் உள்ளனர். முதல்வர் இரங்கல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டிருக்கும் இரங்கல் செய்தியில், , “மூத்த திரைக்கலைஞர் ‘டெல்லி’ கணேஷ் மறைந்த செய்தி அறிந்து மிகவும் வேதனை அடைந்தேன். நாடகத்தில் இருந்து திரைத்துறைக்கு வந்து, தன்னுடைய அடையாளத்தை அழுத்தமாகப் பதித்தவர் டெல்லி கணேஷ். வெள்ளித்திரை மட்டுமல்லாது சின்னத்திரையிலும் டெல்லி கணேஷ் பல தொடர்களில் நடித்து முத்திரை பதித்துள்ளார். அவரது மறைவு திரையுலகிற்கு பேரிழப்பாகும். அவரது பிரிவால் வாடும் குடும்பத்தினருக்கும், திரைத்துறையைச் சேர்ந்த நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று கூறியுள்ளார். துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் திரைக்கலைஞர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் நேரில் சென்று மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். தமிழ் வளர்ச்சி -செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் இரங்கல் தெரிவித்துள்ளார்.