வெனிசுலாவுக்கு எதிரான அமெரிக்க இராணுவ அழுத்தம் தீவிரம்
வெனிசுலாவுக்கு அருகில் உள்ள கரீபியன் கடல் பகுதிக்கு அமெரிக்க கப்பற்படையின் 3 ஏவுகணை அழிப்பு கப்பல்கள் மற்றும் 4000 ராணுவத்தி னரை அமெரிக்க அரசு அனுப்பியுள்ளது. போதைப்பொருள் கடத்தலுக்கு எதிரான நடவடிக்கை என்று வெள்ளை மாளிகை கூறினாலும், உலகின் மிகப்பெரிய எண்ணெய் வளத்தைக் கொண்டுள்ள வெனிசுலாவுக்கு எதிரான அச்சுறுத்தல் என்று பகுப்பாய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இதை எதிர்கொள்ள வெனிசுலா முழுவதும் 45 லட்சம் குடிமக்களுக்கு ஆயுதப் பயிற்சி அளித்து ஆயுதம் வழங்கி தயார் நிலையில் நிறுத்துவோம் என்று வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ ஆகஸ்ட் 18-இல் அறிவித்தார். போதைப்பொருள் கடத்தும் கூட்டணியுடன் தொடர்பு உள்ளது என்று குற்றம் சாட்டி, மதுரோவை அமெரிக்காவிடம் ஒப்படைப்பவருக்கு முன்பு அறிவித்த 2.5 கோடி டாலருக்குப் பதிலாக 5 கோடி டாலர் பண வெகுமதி அளிக்கப்படும் என்று அமெரிக்க அரசு அறிவித்துள்ளது. அமெரிக்காவின் “வரம்பு மீறிய, இயல்புக்கு மீறிய, விசித்திரமான அச்சுறுத்தல்களை” வெனிசுலா அரசு உறுதியாக நிராகரித்துள்ளது. வெனிசுலாவின் வெளியுறவு அமைச்சர், அமெரிக்க அரசின் நடவடிக்கை இப்பிராந்தியத்தில் அதன் கொள்கைகளின் தோல்வியை எடுத்துக்காட்டுகிறது என்று குறிப்பிட்டார். ஐநா போதைப்பொருள் மற்றும் குற்ற அலுவலக அறிக்கையின்படி, போதைப்பொருள்களின் உற்பத்தி மையம் கொலம்பியா, ஈக்வடார் மற்றும் பெருவில் உள்ளது. உலகிலேயே மிக அதிகமாக போதைப்பொருட்கள் நுகரப்படுவது அமெரிக்காவில்தான். கொலம்பியாவிலிருந்து 5% போதைப்பொருட்கள் மட்டுமே வெனிசுலா வழியாக செல்வதாகவும், கோக்கோ இலை வெனிசுலாவில் பயிரிடப்படுவதில்லை என்றும் ஐநா அலுவலகம் தெரிவித்துள்ளது.